வீட்டுவரி உயர்வு: பதிவஞ்சல் வாயிலாக மாநகராட்சிக்கு மறுப்பு கடிதம்: முதற்கட்டமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுப்ப முடிவு

வீட்டு  வரி பலமடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்கான நிலுவை வரியையும்

வீட்டு  வரி பலமடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்கான நிலுவை வரியையும் சேர்த்து செல்லுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறுப்பு கடிதத்தை பதிவஞ்சலில் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு அனுப்பிய நோட்டீஸில்,  குறிப்பிட்ட 15 நாள்களுக்குள் வரித்தொகையைச் செலுத்த தவறினால்,  சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மாநகரில் விரிவாக்கம்  செய்யப்பட்ட திருவெறும்பூர், காட்டூர், எல்லக்குடி  பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத நிலையில், வீட்டுவரி உயர்வு மற்றும் நிலுவை வரி வசூலிப்பு என்ற மாநகராட்சியின் செயல்பாடு ஏற்கத்தக்கதல்ல என்கின்றனர் இப்பகுதி மக்கள்.  இதுகுறித்து திருச்சி மாநகர குடியிருப்போர் நலச்சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சக்திவேல் கூறியது: 10  முதல் 12 மடங்கு வரை வீட்டு வரியை உயர்த்தியதற்கே  பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நிலுவையிலுள்ள வரித் தொகையையும் செலுத்துமாறு  மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயலாகும். மொத்தமாக ஒவ்வொருவரும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வரி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். அந்தந்த ஆண்டுகளில் வீட்டு வரியை வசூலிக்காத அதிகாரிகள் செய்த தவறுக்கு பொதுமக்கள் எப்படி பொறுப்பாக முடியும்.
ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளாக இருந்து மாநகராட்சி பகுதிகளாக மாற்றப்பட்டாலும், இன்று வரை  முறையான குடிநீர், சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை. புதை சாக்கடைத் திட்டப்பணிகளும் முடியவில்லை. ஊராட்சியில்இருந்த போது ரூ.500 வரி செலுத்தியவர்கள் தற்போது ரூ.12 ஆயிரம் வரை செலுத்த வேண்டிய  நிலை ஏற்பட்டிருக்கிறது.
இது போன்ற காரணங்களால் திருச்சியில் வசிக்கும் பொதுமக்கள், மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீசுக்கு மறுப்பு கடிதத்தை பதிவஞ்சலில் அனுப்ப முடிவு செய்து கூட்டமைப்பில் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.
இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தை நாடுவது, மாநகர மக்களை ஒன்று திரட்டி மனிதச்சங்கிலி போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்துவதென்றும் முடிவு செய்துள்ளோம்.
இப்பிரச்னையில் உரிய தீர்வு காணப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்திருப்பதால், மாநகராட்சிக்கு  எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், முதற்கட்டமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறுப்பு கடிதத்தை பதிவஞ்சலில்  நிகழ் வாரத்தில் அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com