சுடச்சுட

  

  திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் தொடர்பாக உள்ளாட்சி மற்றும் குடிநீர் வாரிய அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என். மகேஸ்வரன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு முன்னிலை வகித்தார். இதில், 7 மாவட்டங்களைச் சேர்ந்த குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் பன்னீர்செல்வம், மேற்பார்வைப் பொறியாளர்கள் மணிவண்ணன், ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், ஊராட்சிகளின் உதவி இயக்குநர்கள், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்கள், ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
  கூட்டத்தில், குடிநீர்வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என். மகேஸ்வரன் பேசியது:
  உள்ளாட்சிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்வதை ஒவ்வொரு அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்ற சூழல் இருந்தால் கூடுதலாக தண்ணீர் உள்ள திட்டங்களில் இருந்து மடைமாற்றம் செய்து அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும். தேவையிருப்பின் லாரிகளை பயன்படுத்தியும் குடிநீர் விநியோகிக்கலாம். மழை இல்லாததாலேயே இந்நிலை உருவாகியுள்ளது. எனவே, எதிர்காலச் சந்ததியினருக்கு தண்ணீரை விட்டுவைக்க வேண்டுமெனில் மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். 
  அரசு நிறுவனங்கள், கட்டடங்களில் மட்டும் மழை நீர் சேகரிப்பு என்ற நிலையில்லாமல் ஒவ்வொரு நபரும் அவரவர் இருப்பிடத்தில் மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்க வேண்டும். குடிநீர் ஆதாரத்தைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளில் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
  முன்னதாக, குடிநீர் சிக்கனம் மற்றும் மழைநீர் சேகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு குறும்படங்கள், ஒலி, ஒளிக்காட்சிகளுடன் கூடிய பிரசார வாகனத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த பிரசார வாகனமானது மாவட்டம் முழுவதும் சென்று பொதுமக்கள் கூடும் இடங்களில் குறும்படங்களை ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai