தமிழக ரயில்பாதை மேம்பாட்டு பணிகள் 2022-க்குள் நிறைவுறும்

தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வரும் ரயில்பாதை மேம்பாட்டுப் பணிகள் 2022ஆம் ஆண்டுக்குள்

தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வரும் ரயில்பாதை மேம்பாட்டுப் பணிகள் 2022ஆம் ஆண்டுக்குள்  நிறைவு பெறும்  என தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு தலைமை நிர்வாக அலுவலர் எல். சுதாகர்ராவ் தெரிவித்தார்.
திருச்சியில் ரயில்வே கட்டுமானப் பிரிவு பொறியாளர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியது :தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளப் பகுதிகளில்,  மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகலப்பாதையாக மாற்றும் பணிகள், அகலப்பாதை மேம்பாட்டு பணிகள், இருவழிப்பாதைப் பணிகள், மின்மயப் பணிகள், மற்றும் புதிய பாதைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. இதில் சென்னை அருகே கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு  இடையே 30 கி.மீ தொலைவு,  மதுரை உசிலம்பட்டி இடையே 37 கி.மீ., உசிலம்பட்டி -போடி 53 கி.மீ. தொலைவு,  திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 32 கி.மீ. தொலைவு உள்ளிட்ட  பல்வேறு பணிகள் குறிப்பிடத்தக்கவை. 
இதில் தமிழகப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளில் 204 கி.மீ. தொலைவு பாதைப் பணிகள் மற்றும் கேரளப் பகுதியில் நடைபெற்று வரும் 53 கி.மீ. தொலைவு பணிகள் உள்ளிட்ட  257 கி.மீ. தொலைவு பாதைப்பணிகளை நிகழ் நிதியாண்டு அதாவது 2020 மார்ச் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் திருத்துறைப்பூண்டி -அகஸ்தியம்பள்ளி இடையேயுள்ள பாதையை அகலப் பாதையாக மாற்றிவிட்டால்  தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மீட்டர் கேஜ் பாதை முடிவுக்கு வந்து அகலப்பாதைகளில்தான் ரயில்கள் இயக்கப்படும்  ( இது காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயுள்ள மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றும் திட்டத்துடன் இணைந்த கடைசி மீட்டர்கேஜ் பாதை). 
மேலும்,  மதுரை -கன்னியாகுமரி வரையிலும் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து கேரளப் பகுதிகள் வரையிலும் (ஆர்.வி.என்.எல்.-ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் இணைந்து) நடைபெற்று வரும் இருவழிப்பாதை பணிகளும் இன்னும் 3 ஆண்டுகளில் அதாவது  2022 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். சேலம் கோட்டத்தில் நடந்து வரும் மின்மயப்பணிகளும் 2 ஆண்டுகளில் முடிவுபெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com