கல்லக்குடி ஜல்லிக்கட்டில் ஒருவர் சாவு, 15 பேர் காயம்

திருச்சி மாவட்டம், கல்லக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், கல்லக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர்.  மேலும் ரயில் மோதியதில் 2 காளைகள் இறந்தன.
லால்குடி வட்டம், கல்லக்குடியில் வெள்ளிக்கிழமை காலை கோட்டாட்சியர் இரா. பாலாஜி ஜல்லிக்கட்டைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து அவர் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.
திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 688 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. 317 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
காலை 8.50 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணி வரை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளையொன்றை அடக்கிய போது, அதன் கொம்பு குத்தியதில் பலத்த காயமடைந்த ஆனந்திமேடு கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் ம. மணிகண்டன் (22) லால்குடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 
மேலும், அரியலூர் மாவட்டம், இலந்தகூடம் ம. வேல்முருகன் (24), கோவண்டாக்குறிச்சி ஹரிகிருஷ்ணன் (33), மால்வாய் பாண்டியராஜன், தச்சங்குறிச்சி ராஜ்குமார் உள்பட 15 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு  அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமிலேயே சிகிச்சையளிக்கப்பட்டது. 6 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், வட்டாட்சியர் பாலகங்காதரன், கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
லால்குடி டி.எஸ்.பி.ராஜ்குமார், காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
2 காளைகள் சாவு :  ஜல்லிக்கட்டில்  பெரம்பலூர் மாவட்டம்,  தொண்டமாந்துறையைச் சேர்ந்த வேளாங்கண்ணியின் 2 காளைகள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றன.  ஜல்லிக்கட்டு பகுதியிலிருந்து வெளியே  ஓடிய காளைகளைப் பிடிக்க சென்ற போது, கல்லக்குடி ரயில் நிலையம் அருகே திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அதி விரைவு ரயில் மோதியதில் அவை இரண்டும் உயிரிழந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com