நாகலாபுரம் குடிநீர்ப் பிரச்னை: வட்டாட்சியரகத்தில் அமைதி பேச்சுவார்த்தை
By DIN | Published On : 02nd March 2019 08:19 AM | Last Updated : 02nd March 2019 08:19 AM | அ+அ அ- |

துறையூர் வட்டாட்சியரகத்தில் குடிநீர்ப் பிரச்னை தொடர்பாக நாகலாபுரம் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்..
நாகலாபுரம் ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சார்பில் காவல்துறையில் அனுமதி கோரிய நிலையில், துறையூர் வட்டாட்சியரகத்தில் அதிகாரிகள் தலைமையில்அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கூட்டுக் குடிநீர் வழங்கப்படாத பகுதிக்கு 15 நாள்களுக்குள் திட்டத்தை விரிவு செய்தல், அதுவரை லாரியில் குடிநீர் வழங்குதல், பழுதான மின் மோட்டார்களை சரி செய்தல் போன்ற முடிவுகள் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து துறையூர் ஒன்றியக் குழு அலுவலகம் சார்பில், நாகலாபுரம் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்க லாரி அனுப்பப்பட்டது. முதலில் 500 அடிக்கும், மற்றொரு இடத்தில் 300 அடிக்கும் ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் வரவில்லை.
இதையடுத்து வேறுஇடத்தில் ஆழ்குழாய் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியும், போர்வெல் லாரி பணியாளர்கள் அதிகாரிகள் அனுமதியில்லாமல் செய்ய முடியாது எனக் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.