மது அருந்தும் கூடத்தில் தகராறு: 3 பேர் கைது
By DIN | Published On : 02nd March 2019 08:20 AM | Last Updated : 02nd March 2019 08:20 AM | அ+அ அ- |

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மது அருந்தும் கூடத்தில் தகராறு செய்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வஉசி சாலையில் அரசுக்கு சொந்தமான மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் அருண்குமார்(21), அவரது நண்பர்கள் திவாகர்(24), பாலகிருஷ்ணன்(23) ஆகிய 3 பேரும் வியாழக்கிழமை இரவு மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் அங்கிருந்த மது அருந்தும் இடத்தில் பணம் கொடுத்து மதுபாட்டில் வாங்குவது தொடர்பாக ஊழியரிடம் தகராறு செய்துள்ளனர்.
அருகில் இருந்த ஊழியர்கள், பாதிக்கப்பட்ட ஊழியருக்கு ஆதரவாக பேசவே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொருள்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக மதுஅருந்தும் கூடத்தின் காசாளர் ராமன், அளித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீஸார் வழக்குப் பதிவு அருண்குமார் உள்ளிட்ட மூவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.