இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 04th March 2019 08:41 AM | Last Updated : 04th March 2019 08:41 AM | அ+அ அ- |

இனாம் சமயபுரம் அருள்மிகு ஆதி மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று அம்மனை தரிசனம்
செய்தனர்.
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் உபகோயிலாக விளங்கும் இத்திருக்கோயிலில், பிப்ரவரி 10 ஆம் தேதி பூச்சொரிதல் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6 மணிக்கு கருவறை அம்பாளுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு உற்சவ அம்பாள் புறப்பாடும் நடைபெற்றது.
சிம்மம், யானை, ரிஷபம், அன்னம், குதிரை வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவ அம்பாள் புறப்பாடாகி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 9.40 மணிக்கு சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் சி. குமரதுரை, கிராம பொதுமக்கள் திருத்தேர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர்.
முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் முற்பகல் 11 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள்பங்கேற்று அம்மனைத் தரிசனம் செய்தனர்.