சுடச்சுட

  

  நீடித்த வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரத்தில் சிறப்புத் திட்டங்கள் அவசியம்: மான்டேக் சிங் அலுவாலியா பேச்சு

  By DIN  |   Published on : 16th March 2019 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நமது நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரத்தில் சிறப்புத் திட்டங்கள் அவசியமானது என மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.
  திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ரூ. 8 கோடியில் கட்டப்பட்ட திறன்வளர்ப்பு பயிற்சி மையத்தை திறந்து வைத்து அவர்  மேலும் பேசியது:
  நமது நாட்டின் வேளாண்மையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 17 விழுக்காடாக உள்ளது. 47 விழுக்காட்டினர் விவசாயிகளாக உள்ளனர். ஆனால், விவசாயிகளுக்கு குறிப்பிட்ட லாபம் இல்லை. இதற்கு மாற்றுத் திட்டங்கள் அவசியம். 2022ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.5 சதமாக இருக்கும் இலக்கைக் கொண்டு பயணிப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், இன்றும் 7.3 விழுக்காடு என்ற நிலையிலேயே உள்ளனது.
  நீடித்த வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரத்தில் சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அத்தகைய திட்டங்களால் வளர்ச்சியை உடனடியாகக் காண முடியும். ஆனால், கல்விக்கான திட்டங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் உயர்கல்வி முடித்து வேலைக்கு செல்லும்போதுதான் அதன் வளர்ச்சியைக் கணக்கிட முடியும்.வளர்ச்சி விழுக்காடு என்பது சமூகம் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து இருந்தால் மட்டுமே நீடித்த வளர்ச்சி என்பது சாத்தியமாகும். அதற்கேற்ப தொழில்நுட்ப மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பங்களுக்கு இளைஞர்கள் மட்டுமே மாறாமல் ஒவ்வொரு துறையில் உள்ள மூத்தோரும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், இடைவெளி இருத்தல் கூடாது  என்றார் அவர்.
  நிகழ்ச்சியில், தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் மற்றும் பல்வேறு துறை பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவர், மாணவிகள்  கலந்து கொண்டனர். 
  ரூ. 8 கோடியில் கட்டப்பட்ட திறன் வளர்ப்பு மைய புதிய கட்டடத்தில் 12 நேர்காணல் அறைகள், 4 குழு விவாத அறைகள், 2 கருத்தரங்க கூடங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 4 பெரு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான மாணவர்களை நேர்காணல் செய்யும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai