சுடச்சுட

  


  திருச்சி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
  திருச்சி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதிக்கென மொத்தம் 1,497 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில், ஸ்ரீரங்கத்தில் 294, திருச்சி(மேற்கு)- 256, கிழக்கு- 239, திருவெறும்பூர்- 269, கந்தர்வகோட்டை- 209, புதுக்கோட்டையில் 230 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில், பதற்றமான வாக்குச் சாவடிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் தேவைப்படும் வாக்குச் சாவடிகள் குறித்து ஆட்சியர் சு. சிவராசு ஆய்வு செய்து வருகிறார்.
  திருவரங்கம், திருவெறும்பூர் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், முடிகண்டம் ஊராட்சி ஓலையூரில் உள்ள வாக்குச் சாவடி பதற்றமானவை என கண்டறியப்பட்டதால் அந்த வாக்குச் சாவடியை ஆட்சியர் சு. சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த தேர்தல்களின்போது எத்தகைய அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தன என்பதை கேட்டறிந்து, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
  இதன் தொடர்ச்சியாக திருமலை சமுத்திரம் ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவெறும்பூர் ஒன்றியத்துக்குள்பட்ட பெரிய சூரியூர் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி, சின்னச்சூரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை பார்வையிட்டார்.
  இந்த வாக்குச் சாவடிகளில் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். தேவையிருப்பில் கூடுதல் வசதிகள் செய்துதர வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
  ஆய்வின்போது, திருவரங்கம் வட்டாட்சியர் கனகமாணிக்கம், திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai