காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு: பெண் காவலர் தற்கொலை: லாரியில் மோதி காதலனும் தற்கொலைக்கு முயற்சி

காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால், திருச்சி ஆயுதப்படை  பெண் காவலர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை

காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால், திருச்சி ஆயுதப்படை  பெண் காவலர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவரதுகாதலரான காவலரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம், குளித்தலை திம்மாச்சிபுரத்தைச் சேர்ந்த குமார் மகள் ராஜலட்சுமி (25). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.  சுப்ரமணியபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவர் திருவெறும்பூர் சார்நிலைக் கருவூலத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அரளிவிதையை அரைத்துக் குடித்து விட்டதாகக் கூறி, திருச்சி அரசு மருத்துவமனையில் ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கே.கே.நகர் போலீஸார் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரித்த போது, ராஜலட்சுமியை சிவகுமார்என்பவர் மருத்துவமனையில் அனுமதித்தது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர் குறித்து விசாரித்த போது,  சிவகுமார் பேட்டைவாய்த்தலையைச் சேர்ந்தவர் என்பதும்,  அவர் 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை முதலாமணி (கிராப்பட்டி)யில் காவலராகப் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.  வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறிய நிலையில்,  இருவரது குடும்பத்திலும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
ராஜலட்சுமியின் செல்லிடப்பேசியில் சிவகுமார்ஞாயிற்றுக்கிழமை காலை தொடர்பு கொண்ட போது, அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிவகுமார், சுப்ரமணியபுரம் காவலர் குடியிருப்புக்குச் சென்று பார்த்த போது ராஜலட்சுமியில் மயங்கிய நிலையில் கிடந்தது கண்டு, அவரை மீட்டு மருத்துமவனையில் அனுமதித்தது தெரிய வந்தது.
இதனால் மனமுடைந்த சிவகுமாரும், தனது  இருசக்கர வானத்தில் சென்று, திருச்சி கருமண்டப பகுதியில் கல்லூரி அருகே, முன்னே சென்ற லாரியில் மோதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
தங்கள் காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால்  பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கே.கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com