பங்குனி உத்திரப் பெருவிழா: வயலூர் முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
By DIN | Published On : 22nd March 2019 08:32 AM | Last Updated : 22nd March 2019 08:32 AM | அ+அ அ- |

திருச்சியை அடுத்துள்ள குமாரவயலூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகுகுத்தியும் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அருள்மிகு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தும் விதமாக பால்காவடி எடுத்தும், அலகுகுத்தியும் வந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கொண்டு வந்த பாலை ஊற்றி முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வள்ளி, தெய்வசேனா சமேதராய் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். இதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து வெள்ளிக்கிழமை உபயதார்களின் அபிஷேகம் நடைபெறுகிறது. மார்ச் 23 ஆம் தேதி வள்ளி நாயகி தினைப்புனம் காத்தலும், 24ஆம் தேதி இரவு 8 மணிக்கு வேலன் விருத்தனாக வருதல், யானை விரட்டுதல் பின்னர் பக்தர்களுக்கு காட்சியளித்தல் நடைபெறுகிறது. மார்ச் 25 ஆம் தேதி வள்ளித் திருக்கல்யாண உற்ஸவமும் நடைபெறுகிறது. இதே போல திருச்சி ஜங்ஷன் வழிவிடுமுருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
தொட்டியம் பகுதியில்...
முசிறி, மார்ச் 21: திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்றது.
தொட்டியம் அருகேயுள்ள கரட்டுப்பட்டி கீழ்பழனி முருகன் கோயில் திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்லரர் மலைக்கோயிலில் உள்ள பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது.
திருஈங்கோய்மலையில் பாலதண்டாயுதபாணி முருகன் விழா குழுவினர் காவிரிக்கு சென்று காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக கொண்டு சென்றனர். தொடர்ந்து அங்குள்ள பாவோடி திடலில் காவடியை வைத்து பூஜை செய்து வழிபட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
துறையூரில்...
துறையூர், மார்ச் 21: துறையூரில் பங்குனி உத்திரத்தையொட்டி வியாழக்கிழமை முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
துறையூர் மூங்கில் தெப்பக்குளத்திலிருந்து திருச்சி சாலையில் உள்ள கரட்டுமலை பாலதண்டாயுதபாணிக்கு பலர் சிறு சிறு குழுவாக பால்குடம் மற்றும் காவடி எடுத்துச் சென்று நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். ஆங்காங்கே பக்தர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர், பானகம் விநியோகித்தனர். இதையடுத்து பால தண்டாயுதபாணிக்கு சிறப்புஅபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
இதேபோல துறையூர் கோலோச்சும் முருகன் கோயில், துறையூர் காசி விஸ்வநாதர் கோயில், கங்காரம்மன் கோயில், நந்திகேஸ்வரர் கோயில் மற்றும் பிரிவு சாலையில் உள்ள முருகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
ஸ்ரீரங்கத்தில் பெருமாள்,
தாயார் சேர்த்தி சேவை: இன்று தேரோட்டம்ஸ்ரீரங்கம், மார்ச் 21: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி பெருவிழாவின் 9 ஆம் திருநாளான வியாழக்கிழமை பெருமாள், தாயார் சேர்த்தி சேவையில் காட்சியளித்தனர். வெள்ளிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவையொட்டி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து தங்கக் பல்லக்கில் புறப்பட்டு தாயார் சன்னதிக்கு 9.30-க்கு வந்து சேர்ந்தார். உறையூரில் கமலவள்ளி தாயாருடன் சேர்த்தி சேவையில் காட்சியளித்ததற்காக கோபம் கொண்ட தாயாரை சமாதானம் செய்யும் வைபவம் நடைபெற்றது.
12 மணிக்கு தாயார் முன் மண்டபத்தை நம்பெருமாள் அடைந்து 1.45 மணி வரை முதல் ஏகாந்த நிகழ்ச்சி, தொடர்ந்து தளிகை அமுது செய்தல் நடந்தது.
பங்குனி உத்திர வெள்ளி மண்டபத்தில் மாலை 3 மணிக்கு நம்பெருமாள்,தாயாருடன் சேர்த்தி சேவையில் எழுந்தருளி காட்சியளித்தார்.இதைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இரவு 10.30 மணி வரை சேர்த்தி சேவை நடைபெற்றது.பின்னர் 2 ஆவது ஏகாந்தம்,தீர்த்தவாரி கண்டருளுதல் நடைபெற்றது. 11.30-க்கு சாற்று மறையாகியது. இரவு 12 மணி தொடங்கிவெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணி வரை திருமஞ்சனம் நடைபெறுகிறது. சேர்த்தி சேவையையொட்டி பெருமாள்,தாயார் மூலஸ்தான சேவை இல்லை. வெள்ளிக்கிழமை காலை 7.30-க்கு பங்குனித் தேரோட்டம் (கோரதம்) தொடங்குகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்கின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...