Enable Javscript for better performance
அமைதியான முறையில் தேர்தல் நடைபெற பாதுகாப்பு ஏற்பாடுகள்: காவல்துறை சிறப்பு இயக்குநர்- Dinamani

சுடச்சுட

    

    அமைதியான முறையில் தேர்தல் நடைபெற பாதுகாப்பு ஏற்பாடுகள்: காவல்துறை சிறப்பு இயக்குநர்

    By DIN  |   Published on : 28th March 2019 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய மண்டலத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் காவல்துறை சிறப்பு இயக்குநர் விஜயகுமார்.
    மத்திய மண்டல மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகரப் பகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து அவர் கூறியது:
    மத்திய மண்டலத்தில் திருச்சி, கரூர், பெரம்பலுர், தஞ்சாவூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 6 மக்களவைத்  தொகுதிகளும், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளின் சில பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
     இதைத் தவிர, தஞ்சாவூர், திருவாரூர் சட்டப்பேரவைத்  தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளன.  இதற்காக, 5,781 இடங்களில் 11,314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்காக 995 நடமாடும் தேர்தல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 559 இடங்களிலுள்ள 795 வாக்குச்சாவடிகள் பதற்றம்  நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
    தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, மத்திய மண்டலத்தில் 143 வழக்குகளும், மாநகரப் பகுதிகளில் 5 வழக்குகளும் மார்ச் 26 ஆம்தேதி வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.  மேலும், இப்பகுதிகளில் மார்ச் 11 முதல் 26 ஆம் தேதி வரை நிலுவையிலிருந்த 1,100 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  மேலும், சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு நிலுவையிலுள்ள 605 பிடியாணைகளை நிறைவேற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
    தேர்தலின் போது சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வாய்ப்புள்ளவர்கள்எனக் கண்டறியப்பட்ட 1,742 பேரிடம் உறுதி பிணைப்பத்திரம் பெறப்பட்டு, அவர்கள் காவல்துறை கண்காணிப்பில் உள்ளனர்.
    மத்திய மண்டலத்தில் 41 பேரும், திருச்சி மாநகரத்தில் 9 பேரும் குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,  3,041  உரிமம் பெற்றத் துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது என்றார் விஜயகுமார்.
    கூட்டத்தில், மத்திய மண்டல ஐ.ஜி.  வரதராஜு, திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ்,  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் துணை ஆணையர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai