காவிரியில் கொரம்பு அமைக்க நடவடிக்கை: பாரிவேந்தர்
By DIN | Published On : 28th March 2019 07:55 AM | Last Updated : 28th March 2019 07:55 AM | அ+அ அ- |

விவசாயிகளின் வளர்ச்சிக்காக காவிரியில் கொரம்பு அமைக்கநடவடிக்கை எடுப்பேன் என்றார் திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பாரிவேந்தர்.
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் புதன்கிழமை மாலை தனது பிரசாரத்தைத் தொடங்கி, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து மேலும் அவர் பேசியது:
தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. நாகையநல்லூர் ஏரி தூர்வாரப்பட்டு உபரி நீர் சேமிக்க வேண்டும். விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவிரியில் கொரம்பு அமைக்க வேண்டும், வாழைப் பதப்படுத்தும் குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும், மகளிர் கல்லூரி தொடங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ன. இக்கோரிக்கைகளை ஏற்று அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன். மக்களவைத் தேர்தலில் என்னை வெற்றி பெற செய்து, மக்களவை உறுப்பினராக்கினால் எளிதில் கோரிக்கைகளை நிறைவேற்றிடுவேன் என்றார் பாரிவேந்தர். சின்ன மற்றும் பெரியப்பள்ளிப்பாளையம், ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், சீலைப்பிள்ளையார்புதூர், உன்னியூர், ஆணைக்கல்பட்டி, காடுவெட்டி, நத்தம், எம்.புத்தூர், கார்த்திகைப்பட்டி, பாலசமுத்திரம் பகுதிகளில் பாரிவேந்தர் பிரசாரம் செய்து, தொட்டியத்தில் நிறைவு செய்தார். திமுக வடக்கு மாவட்டச் செயலர் காடுவெட்டி ந.தியாகராஜன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...