நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்றவாறு கல்வி கற்க வேண்டும்
By DIN | Published On : 05th May 2019 03:18 AM | Last Updated : 05th May 2019 03:18 AM | அ+அ அ- |

வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு கல்வி கற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு வேலைவாய்ப்புகளையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றார் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பீமராய மேட்ரி.
திருச்சி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 17ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 201 பேருக்கு இளங்கலைப் பட்டமும், 35 பேருக்கு முதுகலைப் பட்டமும் வழங்கி அவர் மேலும் பேசியது: நவீன தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 10 பேர் செய்யும் வேலையை ஒரே ஒரு ரோபோ செய்யும் நிலை வந்து விட்டது. இதனால் வேலைவாய்ப்புகள் குறைந்து விடும் என்று அச்சப்படாமல் ரோபோக்களை உருவாக்கும் திறமை உள்ளவர்களாக மாணவர்கள் உருவாகிட வேண்டும். நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்றவாறு கல்வி கற்றுக் கொண்டு அதற்கேற்றவாறு வேலைவாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள வேண்டும். புதிய, புதிய படிப்புகளையும் படித்து அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக விழாவுக்கு கல்லூரியின் தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கல்லூரியின் பேராசிரியர்கள் கே.முரளி, சி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் பால கோதண்டபாணி உள்பட துறைத்தலைவர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.