மத்தியிலும்,மாநிலத்திலும் இம்மாதம் 23 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்.
திருச்சி பாலக்கரையில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்த மாநில செயற் குழுக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் மேலும் கூறியது:
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை கண்டிக்கிறோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை இனம் கண்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பா.ஜ.க. அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளதால் மக்களவைத் தேர்தலில் அக்கட்சி தோல்வியைச் சந்திக்கும். அதேபோல இடைத்தேர்தல்களில் அதிமுக தோல்வி அடையும் என்பதால் மத்தியிலும், மாநிலத்திலும் இம்மாதம் 23 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி.
சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு போன்ற நிறுவனங்கள் மோடியின் கைப்பாவையாகச் செயல்படுகிறன. வரும் ஜூன் 21 ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 11 வது ஆண்டு விழா சென்னை காமராஜர் அரங்கில் கட்சியின் தொடக்க விழா,பெருநாள் சந்திப்பு விழா மற்றும் பல்வேறு சாதனைகள் புரிந்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்படும் என்றார் அவர்.
மாநில பொதுச் செயலர் எம். நிஜாம் முகைதீன் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.