நீட் தேர்வு திருச்சிமாவட்டத்தில்18 மையங்களில் 9880 பேர் எழுதினர்

மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை  (நீட் தேர்வு)  திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 18 மையங்களில் 9880 பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். 


மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை  (நீட் தேர்வு)  திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 18 மையங்களில் 9880 பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். 
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தேர்வுகள் முகமை மூலம், எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு  ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.  இத்தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களுக்காக திருச்சி மாவட்டத்தில் 18 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.   இந்த மையங்களில் தேர்வெழுத அனுமதியளிக்கப்பட்டிருந்த 11,229 பேரில் 9880 பேர் மட்டுமே நீட் தேர்வை எழுதினர். 1349 பேர் தேர்வெழுத வரவில்லை.
தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதி : ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற்றாலும்,  தேர்வெழுதுவோர் பிற்பகல் 12.30 மணியிலிருந்தே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வெழுத செல்லும் ஒவ்வொருவரும் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.  மாணவிகளுக்குத் தனியே சோதனை நடத்தப்பட்டது.
நீட் தேர்வை எழுத வருபவர்கள் பென்சில், பேனா, ஸ்கேல், கால்குலேட்டர் போன்றவற்றை கொண்டு வரக்கூடாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தால், இவற்றை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கூடத்திலேயே பந்துமுனைபேனா எனப்படும்  பால்பாய்ண்ட் பேனா வழங்கப்பட்டது.
புகைப்படம் எடுக்க வசதி : தேர்வெழுதுவோர் தங்களின் அனுமதிக் கடிதம் , ஆதார் அட்டை, 2 புகைப்படங்கள் கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சிலர் புகைப்படம் இல்லாமல் வந்த நிலையில்,  தேர்வு மையத்துக்கு அருகிலேயே புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆதார் அட்டை இல்லாமல் வந்த மாணவ, மாணவிகளுக்கு மட்டும் உறுதிமொழிப்படிவம் பெற்றுக் கொண்டு தேர்வெழுத அனுப்பி வைக்கப்பட்டனர்.
எளிதாக இருந்தது : கடந்தாண்டைவிட நிகழாண்டில் கட்டுப்பாடுகள் குறைவாக இருந்தன. மேலும் தேர்வும் கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில் எளிதாக இருந்தது.  இயற்பியல் தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்தன. உயிரியல் தொடர்பான கேள்விகள் அதிகமாக வந்தாலும் அவை எளிதாக இருந்தது என்றார் திருச்சி சமது மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய  ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தைச் சேர்ந்த  மாணவர் கேசவன்.
நகைகள் அணிந்து செல்ல தடை 
தேர்வெழுதுவோர் நகைகள் அணிந்து செல்லக்கூடாது, கையில் கயறுகள் கட்டியிருந்தால் அவற்றை கழற்றிவிட வேண்டும் என தேர்வு மையத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து தகவல் அளிக்கப்பட்டது. இதனால்  மாணவிகள் தாங்கள்  கை, காது, மூக்கு போன்றவற்றில் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி, தங்கள் பெற்றோரிடம்அளித்துச் சென்றனர்.  மாணவ, மாணவிகள் கைகளில் கயறு கட்டியிருந்தால் அவை அறுக்கப்பட்டது. மேலும், மாணவிகள் சடைமாட்டிகள் (ஹேர்பின்) அணிந்து செல்ல  அனுமதி  இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவிகள் தேர்வு மையத்துக்குச் சென்ற மாணவிகள் தலைவிரிகோலத்திலேயே சென்றனர். தங்கள் பிள்ளைகள் தேர்வெழுத சென்றாலும், தேர்வு மையத்துக்கு வெளியே அவர்களது தேர்வு முடியும் வரை பெற்றோர் காத்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com