ஸ்ரீரங்கம் கோயிலில் ஆளும் பல்லக்குடன் சித்திரைத் தேர்த் திருவிழா நிறைவு
By DIN | Published On : 06th May 2019 03:21 AM | Last Updated : 06th May 2019 03:21 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா ஆளும் பல்லக்குடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
இக்கோயிலில் விருப்பன் திருநாள் என்றழைக்கப்படும் சித்திரைத் தேர்த் திருவிழா கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 3 ஆம் தேதி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று நம்பெருமாளைத் தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை ஆளும்பல்லக்கு நடைபெற்றது. இதையொட்டி கருவறையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட நம்பெருமாள், பிற்பகல் 3.30 மணிக்கு கருடமண்டபத்தை வந்தடைந்தார்.
இரவு 7 மணிக்குப் புறப்பட்ட நம்பெருமாள், இரவு 7.30மணிக்கு வாகன மண்டபம் சென்றடைந்தார்.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆளும் பல்லக்கில் இரவு 8 மணிக்குப் புறப்பட்ட நம்பெருமாள், சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு 9.30 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்த நம்பெருமாள், அங்கிருந்து புறப்பாடாகி இரவு 9.45 மணிக்கு கருவறை சென்றடைந்தார்.
அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் ஆளும் பல்லக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.