கணவருக்கு சட்டவிரோத காவல்: ஆட்சியரிடம் பெண் புகார்
By DIN | Published On : 15th May 2019 08:25 AM | Last Updated : 15th May 2019 08:25 AM | அ+அ அ- |

தனது கணவரை தேசியப் புலனாய்வு முகமையினர் (என்ஐஏ) சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாகக் கூறி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இளங்காகுறிச்சியைச் சேர்ந்த ரஜியா பேகம் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பது:
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட இளங்காகுறிச்சி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் எனது கணவர் முகமது பாரூக். இவரை , தேசியப் புலனாய்வு முகமை ஏ.டி.எஸ்.பி சௌகத் அலி தலைமையிலான போலீஸார், கடந்த 8ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
கணவரை, 5 நாள்களுக்கு மேலாக சட்ட விரோதமாக காவலில் அடைத்து வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமலும், நீதிமன்ற உத்தரவைப் பெற்று காவலில் எடுத்து விசாரிக்காமலும் சட்டத்துக்கு புறம்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
விசாரணை என்ற பெயரில் மிரட்டி பொய் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.