அமைச்சர் மீது நடவடிக்கை கோரி மக்கள் நீதி மய்யம் புகார் மனு

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  மக்கள் நீதி மய்யம்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்குரைஞர் திருச்சி போலீஸில் புகார் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக  இக்கட்சியின் நிர்வாகியும் மற்றும் வழக்குரைஞருமான எஸ்.ஆர். கிஷோர்குமார், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகார் மனு:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரசாரத்தில் பேசிய கருத்துக்கு உரிய வகையில் பதில் தராமல், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசி வருகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், அமைச்சராக உறுதிமொழியேற்றதற்கு முரணாக கொலைமிரட்டல் விடுக்கும் வகையில், கமல்ஹாசன் குறித்து தனிப்பட்ட முறையில் பகிரங்கமாக பேசி வருகிறார்.
தேர்தல் பிரசாரத்துக்கு தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கு ஒருவொருக்கொருவர் கருத்து ரீதியாக பதில் அளிக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப் பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவி வகிப்பவர் நாக்கை அறுப்பேன் என பேசி வருவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில், தனி மனித தாக்குதலுக்கு வித்திடும் வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக, அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கிஷோர்குமார் பேசியது:
எங்கள் கட்சித் தலைவர் மீதான புகார் கொடுத்தால், காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்கிறது. ஆனால், நாங்கள் புகார் மனு அளித்தால் உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்றே மனு மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்கின்றனர். ஆன்-லைன் மூலமும் புகார் அளித்துள்ளோம். இப்புகாரின் பேரில், எப்ஐஆர் பதிவு செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com