எங்கு சென்றாலும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்:  மன்னார்குடி ஜீயர்

தமிழகத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் கமல்ஹாசனுக்கு எதிர்ப்புத் தெரிவிப்போம் என்றார் மன்னார்குடி அஹோபில மடம் ஸ்ரீ செண்டலங்கார ஜீயர் சுவாமிகள். 

தமிழகத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் கமல்ஹாசனுக்கு எதிர்ப்புத் தெரிவிப்போம் என்றார் மன்னார்குடி அஹோபில மடம் ஸ்ரீ செண்டலங்கார ஜீயர் சுவாமிகள். 
திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளிடம் கிடைக்கும் பணத்துக்காக இந்து விரோதப் பேச்சை வெளிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன். சினிமாவில் பணத்துக்காக நடிப்பதைப் போல அரசியலில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒரு தரப்புக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகிறார். 
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக் குறிப்பிட்டு அந்த மதத்தைச் சேர்ந்தவர்களை தீவிரவாதிகள் எனச் சித்தரிக்க முயல்கிறார். தனிநபரைக் குறிப்பிட்டு பேசாமல் ஒட்டுமொத்த மதத்தையே குற்றம் சுமத்தக் கூடாது.  
வன்முறையை எந்தச் சூழலிலும் யாரும் கையிலெடுக்கக் கூடாது. பொறுமை கடலை விடப் பெரிது. அந்தக் கடல் பொங்கினால் தாங்க முடியாது.
இதுபோல இந்துக்களை கமல் தொடர்ந்து விமர்சித்தால் பொதுமக்களே பொங்கியெழுவர். கமல்ஹாசனை தமிழகத்தில் நடமாட விடாமல் செய்வர். எங்கு சென்றாலும் எதிர்ப்புத் தெரிவிக்கும் சூழல் ஏற்படும். மன்னிப்புக் கோரினாலும் ஏற்க மாட்டோம். காலணியால் அடித்துவிட்டு மன்னிப்புக் கோரினால் ஏற்க முடியாது. 
கமல்ஹாசன் கட்சியை தடை செய்யக் கோரி அகில பாரத துறவிகள் சங்கம் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்படும். தேர்தல் ஆணையம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். 
ஸ்ரீரங்கம் உள்பட தமிழகத்தின் அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கு இடையூறாகச் செயல்படும் அதிகாரிகள் மீதும், ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களுக்கு சொந்தமான நகைகளை பராமரித்து வந்த அதிகாரிகள் பலரும் ஓய்வு பெற்ற நிலையில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், கோயில் நகைகள் எங்குள்ளது என்பதே தெரியாமல் போகும். 
அறநிலையத்துறை மூலம் அதிகாரிகளை நியமித்து கோயில் நகைகளைப் பாதுகாக்க வேண்டும். 
வைணவக் கோயில்களில் ராமானுஜர் வழிபாடுக்கு ஆவன செய்ய வேண்டும். திருக்கோயில்கள் மீதான தமிழக அரசின் செயல்பாடுகளும், அறநிலையத் துறையின் செயல்பாடுகளும் பாராட்டும் வகையில் உள்ளன.
 இருப்பினும், பக்தர்களுக்கான இடையூறு, ஊழல் உள்ளிட்டவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com