மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு கட்டுப்பாடு: அலுவலர்கள், விஞ்ஞானிகளுக்கான இரு நாள் பயிற்சி தொடக்கம்

மக்காச் சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு கட்டுப்பாடு நிர்வாகம் தொடர்பாக, திருச்சியில்

மக்காச் சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு கட்டுப்பாடு நிர்வாகம் தொடர்பாக, திருச்சியில்  வேளாண்துறை அலுவலர்கள், விஞ்ஞானிகளுக்கு 2 நாள் பணிமனை பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மத்திய வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம் ஆகியவை இணைந்து, நவலூர் குட்டப்பட்டு அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்திய முகாமை, வேளாண் இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி தொடக்கி வைத்து பேசியது:
தமிழகத்தில் 3.5 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு சாகுபடி செய்யப்பட்ட மக்காச் சோளப்பயிரை அமெரிக்கன் படைப்புழு எனும் புதிய பூச்சித் தாக்கி, சேதத்தை ஏற்படுத்தியது. இப்பூச்சியானது முதன்முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டது. பின்னர், கர்நாடக மாநிலம் சிமோஹா பகுதியில் கடந்தாண்டு கண்டறியப்பட்டது.
 குறுகிய காலத்தில் கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவியது. இந்தாண்டு மியான்மர், இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் தாய் அந்துப்பூச்சியானது ஒரு இரவில் அதிகபட்சமாக 100 கி.மீ பயணம் செய்யக் கூடியது. வளர்ந்த தாய் அந்துப்பூச்சிகள் சராசரியாக 150 முதல் 200 முட்டைகள் இடும். வெயில் காலங்களில் 14 நாள், குளிர் காலங்களில் 30 நாள் புழு பருவமாக இருக்கும். ஒரு பருவ மக்காச் சோள சாகுபடியின்போதே 3 வாழ்க்கை சுழற்சி முறையை முடித்துவிடும். இதனால், கடந்தாண்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்தாண்டு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, முன்பருவ மக்காச் சோள படைப்புழு கட்டுப்பாடு பணிமனை பயிற்சி வகுப்பை அலுவலர்களுக்கு நடத்த திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், பங்கேற்கும் அலுவலர்கள் அவரவர் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள், விழிப்புணர்வு வழங்கி மகசூல் இழப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர்கள், மத்திய ஒருங்கிணைந்தபயிர்ப் பாதுகாப்பு மைய விஞ்ஞானிகள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்  பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். வியாழக்கிழமையும் பயிற்சி நடைபெறும்.  இப்பயிற்சி வகுப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர்கள், பூச்சியியல் அலுவலர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. காரிப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் மக்காச் சோளத்தில் இந்த புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தி, உணவுதானிய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com