முறைகேடாக மது விற்ற 7 பேர் கைது
By DIN | Published On : 16th May 2019 08:52 AM | Last Updated : 16th May 2019 08:52 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் முறைகேடாக மது விற்ற 7 பேர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 200 மதுபாட்டில்கள், 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவெறும்பூர் பகுதிகளில் தொடர்ந்து முறைகேடாக மது விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில், ஏ.எஸ்.பி. பிரவீன் உமேஷ், ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை திருவெறும்பூர் பகுதிகளில் கண்காணிப்பை மேற்கொண்டனர்.
அப்போது, பத்தாளப்பேட்டை பகுதி மதுக்கடைகளில் வாங்கி வரும் மது வகைகளை, சிலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற போலீஸார், அங்கு விற்பனையில் ஈடுபட்டவர்களைப் பிடித்தனர்.
அவர்கள் தஞ்சை மாவட்டம், மாரனேரி புதுகாலனி ரா. சந்தோஷ், மெ. செல்வேந்திரன் (27), ஆ. இருதயராஜ்(27), ராயமுண்டன்பட்டி தசரதன் (51), கடம்பக்குடி அ. அப்பு (28), இந்தலூர் சரத் (25), வேங்குடி ராஜேந்திரன் (53) எனத் தெரிய வந்தது.
இதையடுத்து 7 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 200 மதுபாட்டில்கள், 5 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.