ரயில்வே பணியில்  விபத்துகளைத் தவிர்க்க என்ன வழி?

ரயில்வே துறையில் ஏற்படும் அசாதாரண சூழல் மற்றும் விபத்துகளைத் தவிர்க்க, அந்தந்த மாநிலத்தவருக்கு
ரயில்வே பணியில்  விபத்துகளைத் தவிர்க்க என்ன வழி?

ரயில்வே துறையில் ஏற்படும் அசாதாரண சூழல் மற்றும் விபத்துகளைத் தவிர்க்க, அந்தந்த மாநிலத்தவருக்கு பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் அல்லது பிற மாநிலத்தவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் திருமங்கலம்-கள்ளிக்குடி தடத்தில்  அண்மையில் ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிர் எதிரே வந்த நிலையில், ரயில்கள் நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

இதற்கு காரணமான திருமங்கலம் ரயில் நிலைய அதிகாரியான தமிழகத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்,  கள்ளிக்குடி நிலைய அதிகாரியான  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவசிங் மீனா  ஆகிய இருவரும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணியில் குளறுபடிக்கு தமிழக அதிகாரி தமிழிலும், வடமாநில அதிகாரி இந்தியிலும் பேசிக் கொண்டதும்,  ஒருவர் பேசியது மற்றவருக்கு சரியாக  புரியாததுமே காரணம் எனத் தெரியவந்துள்ளது. 
இதற்கான தீர்வு குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலர் மனோகரன் கூறியது: பெரும்பாலும் ரயில்வே பணிக்கு வரும் வட மாநிலத்தவர்கள் இந்தி மொழியில்தான் போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெறுகின்றனர். அவர்களில் ஆங்கில வழியில் கற்றவர்கள் மிகக் குறைவு.  மேலும் பணிச்சூழலுக்குத் தேவையான வகையில் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்வதுமில்லை. தண்டவாளப் பராமரிப்பு, ரயில் நிலைய மேலாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில் ஒட்டுநர்கள் என ரயில்வேயின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் இவர்கள், அவரவர் துறையில்  மொழிப் பிரச்னையை அன்றாடம் சந்தித்து வருகின்றனர்.

இந்தியாவில் அனைத்து  மாநிலங்களிலும் ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்தவர்களையே முழுமையாக நியமிக்க இயலாது. சில மாநிலங்களில் அதற்கு ஆட்கள் கிடைக்காது. மேலும் ஒரு மண்டல ரயில்வே இரண்டு அல்ல மூன்று மாநிலங்களை உள்ளடங்கியதாக இருக்கும். எனவே பணி நியமனத்தின்போது குறிப்பிட்ட மாநிலப் பகுதிகளில் பணியாற்ற அந்தந்த மாநிலத்தவருக்கு முன்னுரிமை தர வேண்டும். மற்ற மாநில ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்களுக்கு ஆங்கிலத் தகுதி தேர்வு ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் வெற்றி பெறுவோர் மட்டுமே பிற மாநிலங்களில் பணிகளுக்கு விண்ணப்பிக்க  அனுமதிக்க வேண்டும். வெற்றி பெறாதவர்களை தங்கள் சொந்த மாநிலத்தில்  ரயில்வே பணிகளுக்கு அனுமதிக்கும்  கொள்கை முடிவை அரசு உருவாக்க வேண்டும். இதுதான் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com