முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
துறையூரில் திடீர் போக்குவரத்து நெரிசல்; பொதுமக்கள் கடும் அவதி
By DIN | Published On : 18th May 2019 09:06 AM | Last Updated : 18th May 2019 09:06 AM | அ+அ அ- |

துறையூரில் உள்ள திருச்சி சாலையில் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
வைகாசி மாத முதல் திருமண முகூர்த்த நாளான வெள்ளிக்கிழமை துறையூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அனைத்துத் திருமணக் கூடங்களிலும் திருமண, வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோயில்களில் நடந்த திருமணங்களில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு உணவகங்களில் உணவு ஏற்பாடு செய்தனர். இதனால் இவர்களை லாரிகள், சுமை ஆட்டோக்களில் ஏற்றிச் சென்றதால் வழக்கத்தை விட அதிக வாகனப் பயன்பாடும் கடைகள், வங்கிகள் முன் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டதாலும் துறையூரில் கார் நிறுத்துமிடத்திலிருந்து பாலக்கரை வரை வாகன நெரிசலும் ஏற்பட்டது.
ஒரு பக்கம் வண்டி நிறுத்தப்பட்டிருந்தால் அதே வழியாக வாகனத்தில் சென்றோர் ரோட்டின் வலது புறம் ஏறிச் சென்றனர். இதனால் எதிர்முனையில் சென்ற வாகனங்கள் வரிசையாக தேக்கம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றோர் முந்திச் செல்ல ஆசைப்பட்டு தேங்கி நின்ற வாகனங்களுக்கு இடையே சென்று அந்த வாகனங்களை அசைய விடாமல் செய்தனர்.
இதற்கிடையே பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்ற நிகழ்ச்சியில் ஆர்வக்கோளாறு இளைஞர்கள் ஆங்காங்கே ஒரே இடத்தில் ஆடிக் கொண்டே நின்றனர்.
இதனால் பால்குடம் எடுத்துச் சென்றவர்களும், அவர்களுக்கு உதவியாக சாலையின் வெப்பத்தைத் தணிக்க நீர் இறைத்துச் சென்ற லாரியும் ஆங்காங்கே நின்றது. இதனால் நகரில் காலை 9 மணியிலிருந்து சுமார் 2 மணி வரை அடுத்தடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் துறையூர் நகரவாசிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர். பாதசாரிகளும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் ஒதுங்கக் கூடமுடியாமல் அவதியுற்றனர். அடுத்தடுத்து ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போலீஸார் முன்வராததால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியடைந்தனர்.