முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ரயில்வே பணி வழங்குவதில் தாமதம்: முன்னாள் ராணுவத்தினர் முற்றுகை
By DIN | Published On : 18th May 2019 09:03 AM | Last Updated : 18th May 2019 09:03 AM | அ+அ அ- |

திருச்சியில், ரயில்வே பணிகளுக்கு தேர்வு செய்தும் பணி வழங்க தாமதமாகி வருவதைக் கண்டித்து முன்னாள் ராணுவத்தினர் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனர்.
ரயில்வே துறையில் கேட்கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பலர் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தேர்வுகள் மற்றும் பயிற்சிகள் முடிந்தும் இன்னும் பணி ஆணை வழங்கவில்லை. இதில், ரயில்வே கேட் கீப்பர் பணிக்கு தேர்வான சுமார் 50-க்கும் மேற்பட்டோர், வெள்ளிக்கிழமை காலை திருச்சியில் உள்ள 117 பிரதேச ராணுவ முகாம் அலுவலகத்தில் குவிந்தனர். தங்களது பணி விவரம் குறித்து கேட்டனர். ராணுவ அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், ரயில்வே பணிக்கு பரிந்துரைப்பது மட்டுமே தங்களது பணி, மேலும் பணிக்கு சேர்ப்பதும் தாமதிப்பதும் ரயில்வே துறை தொடர்புடையது எனக் கூறினர். இதனையடுத்து திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்துக்கு சென்று, கோட்ட மேலாளரை சந்திக்க முயன்றனர். அவர் வெளியூர் சென்றதை அடுத்து ரயில்வே அதிகாரிகளிடம் முறையிட்டனர். இது குறித்த தகவல்களை தலைமையகத்துக்கு தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.