இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக ஆட்சி பலம் பெறும்

இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக ஆட்சி பலம் பெறும், பொதுத் தேர்தல் முடிவுகளின்படி

இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக ஆட்சி பலம் பெறும், பொதுத் தேர்தல் முடிவுகளின்படி மத்தியில் தாமரை மீண்டும் மலரும் என்றார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தலில் தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையவும், மத்தியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடரும் வகையிலும் வாக்களிக்க வேண்டும். மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது திமுக தமிழகத்துக்கு எந்த நலத் திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோதும் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. அதன் காரணமாகவே இப்போது குடிநீர்ப் பிரச்னையைச் சந்திக்க வேண்டியுள்ளது.
காவிரி பிரச்னையில்கூட காங்கிரஸும், திமுகவும் பல ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் நிரந்தரத் தீர்வு காணவில்லை. பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகே ஓரளவுக்குத் தீர்வு காணப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார காலத்தில் தேவையில்லாமல் கமல்ஹாசன் சில கருத்துகளை பதிவு செய்கிறார். சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும் என நினைக்கிறாரா?, திரைப்படத்தில் பிரபலமாகிவிட்டோம் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், அவரது முதிர்ச்சியின்மை தெரிகிறது. அரசியலில் கமலுக்கு நல்ல பக்குவம் தேவை. பிரிவினைக் கருத்துகளைப் பேசினால் எத்தகைய பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்பதை யூகித்து பேச வேண்டும். இந்து தீவிரவாதம் என குறிப்பிடும்போது ஒட்டுமொத்த இந்துக்களையும் புண்படுத்துவதாக அமைந்துவிடுகிறது. சினிமாவில் கருத்துச் சொன்னாலே எதிர்ப்புக் கிளம்புகிறது. 
மேற்குவங்கத்தில் திட்டமிட்டு வன்முறையைப் புகுத்துகின்றனர். தமிழகத்தில் அத்தகைய நிலை இல்லை. நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்கு பாஜக வேட்பாளர் மன்னிப்புக் கோரியுள்ளார். மக்கள் நீதி மய்யத்துடன் பாஜகவுக்கு எந்த ரகசிய உறவும் இல்லை. திமுக மட்டுமே பல கட்சிகளுடன் ரகசிய உறவும், ரகசிய சந்திப்புகளையும் நடத்தி வருகிறது. 
தமிழகத்தில் விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது. ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படுமெனில் அத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும். ஆய்வுக்கு மட்டுமே தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். 
முன்னதாக விராலிமலை அருகேயுள்ள ராஜாளிபட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் அவர் பங்கேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com