தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் மே 22 இல் சர்வதேசக் கருத்தரங்கு
By DIN | Published On : 18th May 2019 09:02 AM | Last Updated : 18th May 2019 09:02 AM | அ+அ அ- |

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு மே 22 தொடங்கி 3 நாள் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக கருத்தரங்க புரவலரும், முனைவருமான எஸ். ராகவன் கூறியது:
கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் பன்னாட்டு வல்லுநர்கள் பங்கேற்கும் கருத்தரங்கத்துக்கு திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. டெக்யுப் உதவியுடன் நடைபெறும் இக் கருத்தரங்கானது நுண்ணலை ஒருங்கிணைந்த மின்சுற்றுகள், ஒளியியல் மற்றும் தடமில்லா இணைப்புகள் என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.
கருத்தரங்கில் அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து நுண்ணலைப் பொறியியல் விஞ்ஞானிகள், ஒளியியல் துறை விஞ்ஞானிகள், மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை விஞ்ஞானிகள் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், 300-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன. இதிலிருந்து 190 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றப்படும்.ஏற்பாடுகளை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், கருத்தரங்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன், அலை செலுத்துதல் குழுத் தலைவர் எஸ். கார்த்திகேயன் ஆகியோர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
கருத்தரங்க துணைத் தலைவர்களாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முகமது, அறிவியலாளர் நருசிங்க சாரான் பிரதான், புதுதில்லி ஐஐடி பேராசிரியர் ஷிபான் கவுல் நியமிக்கப்பட்டுள்ளனர். கருத்தரங்கை மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத் தலைவரும், பாதுகாப்பு செயலருமான சதீஷ்ரட்டி தொடங்கி வைக்கவுள்ளார் என்று தெரிவித்தார்.