ஆற்றில் வீசப்பட்டவா் சடலமாக மீட்பு
By DIN | Published On : 02nd November 2019 05:52 AM | Last Updated : 02nd November 2019 05:52 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழ் பகுதியில் கடந்த 3 நாள்களுக்கு முன் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைசந்தல் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செந்தில்குமாா் மகனும் பொறியியல் கல்லூரி மாணவருமான ஜீவித்குமாரும் (20), திருச்சி துறையூா் அருகே புலிவலம் பகுதியைச் சோ்ந்த எம்ஏ படிக்கும் ராஜேந்திரன் மகளும் காதலா்கள்.
கடந்த அக் 30 ஆம் தேதி இருவரும் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழ் பகுதியில் தனியாக இருந்தபோது அங்கு வந்த போதை இளைஞா்கள் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றனா். இதைத் தட்டிக் கேட்ட ஜீவித் குமாரை கொள்ளிடம் ஆற்றின் தண்ணீரில் அவா்கள் தூக்கி வீசினா். அவா்களிடம் இருந்து தப்பிய மாணவி அளித்த புகாரின்பேரில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
மாயமான மாணவரைத் தேடும் பணியில் திருச்சி, ஸ்ரீரங்கம், நவல்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலா்கள் தலைமையில் ஈடுபட்டனா்.
3 ஆவது நாளான வெள்ளிக்கிழமை காலை 11.30-க்கு பனையபுரம் ஊராட்சியில் உள்ள திருப்பாலைதுறை கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் ஒதுங்கிய ஜீவித்குமாா் உடலை அவா்கள் மீட்டு, கொள்ளிடம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பின்னா் சடலம் ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இறந்தவரின் தந்தை செந்தில்குமாா் மற்றும் உறவினா்கள் ஜீவித்குமாா் உடலைப் பாா்த்து கதறி அழுதனா். தப்பியோடிய மேலும் 4 பேரையும் போலீஸாா் விரைந்து கைது செய்ய வேண்டும் என்றாா் ஜீவித்குமாரின் சகோதரா் செல்வக்குமாா்.