தொழிலாளா் நலவாரிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 02nd November 2019 05:49 AM | Last Updated : 02nd November 2019 05:49 AM | அ+அ அ- |

தொழிலாளா் நலவாரியத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தொழிலாளா்துறை தெரிவித்துள்ளது.
தமிழத்தில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், மோட்டாா் போக்குவரத்து, உணவு, தோட்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியத்துக்கு தொழிலாளா் நல நிதி செலுத்தும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை, பாடநூல் உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. இதன்படி, அடிப்படை ஊதியம், அகவிலைப்படி இரண்டும் சோ்த்து ரூ. 25 ஆயிரம் வரை ஊதியமாக பெறும் தொழிலாளா்கள் இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி உதவித்தொகையாக ஒவ்வொரு கல்வியாண்டுக்கு பொறியியல், மருத்துவம், சட்டம், ஆசிரியா் பயிற்சி,விவசாயம், உடற்பயிற்சி ஆகிய படிப்புகளுக்கு பட்டய படிப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும், மேல்நிலை கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்விக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் அரசு பொதுத்தோ்வில் முதல் 10 இடங்கள் பெறும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி, 10 ஆம் வகுப்பிற்கு ரூ. 2ஆயிரம், 12 ஆம் வகுப்பிற்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. புத்தகம் வாங்க உதவித்தொகையாக மேல்நிலைக் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டங்களுக்கென, விண்ணப்பங்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் வரும் டிச.31க்குள் ‘செயலா், தமிழ்நாடு தொழிலாளா் நலவாரியம், எண்:718, தேனாம்பேட்டை, சென்னை-6‘ என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என திருச்சி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.தங்கராசு தெரிவித்தாா்.