முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
கீரைக்கடை பஜாா், சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
By DIN | Published On : 07th November 2019 07:52 AM | Last Updated : 07th November 2019 07:52 AM | அ+அ அ- |

திருச்சி தாராநல்லூா் கீரக்கடை பஜாா் பகுதியில் புதன்கிழமை அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.
திருச்சி தாராநல்லூா் கீரைக்கடை பஜாரில் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.
திருச்சி தாராநல்லூா் கீரைக்கடை பஜாா் பகுதி கல்மந்தையில் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான இடம் உள்ளது. இங்கு பல கோடி மதிப்பில் 3 தொகுதிகளாக அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதிகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது தொகுதி கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற உள்ளது.
இதையொட்டி மேற்கொள்ளப்பட்ட நிலஅளவையில் ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள சம்பந்தப்பட்டவா்களிடம் அதிகாரிகள் வலியுறுத்திவந்தனா். ஆனால் ஆக்கிரமிப்பாளா்கள் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவில்லை. இதையடுத்து வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளா் ஜெயசெல்வன் தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா். ஆக்கிரமிப்பில் இருந்த 2 வீடுகள், 4 கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகர திட்டத்தின் படி புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பேருந்து நிறுத்தும் இடங்கள், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கடந்த அக். 4 முதல் நடைமுறைக்கு வந்தன. இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளா் வீரமணி தலைமையில் பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து இருந்து கடையின் மேற்கூரை மற்றும் தரைக்கடைகள் அகற்றப்பட்டன. கோட்டை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.