மானியம், கடனுதவி: திருச்சியில் நவ.12-ல் திட்டங்கள் விளக்கும் முகாம்
By DIN | Published On : 08th November 2019 06:32 AM | Last Updated : 08th November 2019 06:32 AM | அ+அ அ- |

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானிய உதவிகள் குறித்த திட்டங்கள் விளக்கும் முகாம் வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்காகவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் பல்வேறு மானிய உதவிகளும், கடன்களும் வழங்கப்படுகின்றன. இயந்திர தளவாடங்களின் மதிப்பில் ரூ.50 லட்சம் வரை முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. மின் கட்டணத்தில் 36 மாதங்களுக்கு 20 சதம் மானியம், மின்னாக்கி நிறுவும் வகையில் 25 சதம் மானியம் வழங்கப்படுகிறது. ஆற்றல் தணிக்கை மானியம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அனைத்து உரிமங்கள், அனுமதிகளை இ-மையம் மூலம் ஒற்றைசாளர முறையில் வழங்கப்படுகிறது.
இத்தகைய திட்டங்கள் குறித்து தொழில்முனைவோருக்கு விளக்கிக் கூறவும், புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 12 ஆம் தேதி திட்டம் விளக்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமில், வங்கி அலுவலா்கள், பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்தும், பயன்பெறும் வழிமுறைகள் குறித்தும் விளக்கிக் கூறவுள்ளனா் என்றாா்.