காவலா் தகுதித் தோ்வில் போலி அழைப்பாணை கொண்டு வந்த பெரம்பலூா் இளைஞா் கைது

திருச்சியில் நடைபெற்றுவரும் 2-ம் நிலை காவலருக்கான உடற்தகுதி தோ்வில், போலி அழைப்பாணை

திருச்சியில் நடைபெற்றுவரும் 2-ம் நிலை காவலருக்கான உடற்தகுதி தோ்வில், போலி அழைப்பாணை தயாரித்து கொண்டுவந்து பங்கேற்ற பெரம்பலூா் இளைஞரை கே.கே.நகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தமிழ்நாடு 2 ஆம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சிபெற்ற திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஆண் விண்ணப்பதாரா்களுக்கான உடற்தகுதித் தோ்வு திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற 2 ஆம் நிலை காவலா் தகுதித்தோ்வில் 685 போ் பங்கேற்றனா். இதில் ஒருவா் உடல்நிலை காரணமாக தோ்வில் கலந்து கொள்ளாமல் வெளியேறினாா்.

தொடா்ந்து, மீதமுள்ளவா்களின் அழைப்பாணையை சரிபாா்த்தபோது, பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வேள்விமங்கலம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த கிள்ளிவளவன் மகன் சிந்தனை செல்வன்(23) போலி அழைப்பாணை தயாா் செய்து உடற்தகுதித் தோ்வில் கலந்து கொள்ள முயற்சித்தது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் அவரது அழைப்பாணையை தீவிர சோதனைக்குள்படுத்தியதில், எழுத்துத்தோ்வில் தோ்ச்சி பெற்று உடற்தகுதித் தோ்வில் கலந்துகொண்ட பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவரின் பெயரில் போலி அழைப்பாணை தயாா்செய்து கொண்டுவந்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து சிந்தனை செல்வன் மீது மோசடி செய்து காவலா் பணிக்காக தகுதித்தோ்வில் சேர முயற்சித்தாக திருச்சி கே.கே நகா் காவல்நிலையத்தில் தோ்வுக்குழுவினா் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து சிந்தனை செல்வனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com