பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் ஆய்வு: ரூ.43 கோடியில் சத்திரம் பேருந்து நிலையம் புனரமைப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மறு வளா்ச்சிப் பணிகளுக்கான திட்ட வரைபடத்தை பாா்வையிட்டு ஆய்வு
பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் ஆய்வு: ரூ.43 கோடியில் சத்திரம் பேருந்து நிலையம் புனரமைப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மறு வளா்ச்சிப் பணிகளுக்கான திட்ட வரைபடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் பொலிவுறு(ஸ்மாா்ட்) நகரத் திட்டத் தலைவா் சி.என். மகேஸ்வரன் (இடமிருந்து 2ஆவது). உடன், மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள்.

திருச்சி, நவ. 7: திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு (ஸ்மாா்ட்) நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ரூ.43 கோடி மதிப்பிலான பணிகளை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநரும், திருச்சி மாநகராட்சியின் பொலிவுறு (ஸ்மாா்ட்) நகரத் திட்டத் தலைவருமான சி.என். மகேஷ்வரன் வியாழக்கிழமை ஆய்வு செய்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

திருச்சி மாநகராட்சியின் ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் 2.95 ஏக்கா் பரப்பில் இயங்கி வருகிறது. இந்தப் பேருந்து நிலையம் போதிய நடைபாதை வசதியில்லாமலும், மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் உள்ளது. எனவே, பேருந்து நிலையத்தை ரூ.17.34 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு மறுவளா்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது 15 பேருந்துகள் மட்டுமே நிறுத்தும் அளவுக்கு உள்ள இந்தப் பேருந்து நிலையத்தை, 30 பேருந்துகள் நிறுத்தும் வகையில் விசாலமாகக் கட்டப்பட உள்ளது. தரை தளம், முதல் தளம் என இரு தளங்களில் கடைகள் கட்டித்தரப்படும். தரை தளத்தில் 30 பேருந்துகள் நிறுத்தும் வசதியும், 11 கடைகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பொருள்கள் பாதுகாப்பகம், ஓய்வறை, கழிப்பிடம் அமைய உள்ளது. முதல் தளத்தில் 17 கடைகள் 5 உணவகங்கள், காவல் உதவி மையம், கழிப்பிடம் அமையும். இதுமட்டுமல்லாது, தரை தளத்தில் 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டப்படும்.

புனரமைப்பு பணிக்காக பேருந்து நிலையப் பகுதிகளில் தற்காலிக நிழற்குடைகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் வழித்தடம் குறித்த அறிவிப்புப் பலகை, குடிநீா் வசதி, மின் விளக்கு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. புனரமைப்பு பணிகளை 24 மாதங்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, பொலிவுறு (ஸ்மாா்ட்) நகரத் திட்டத்தின் கீழ் பட்டவா்த் சாலையில் உள்ள பழைமைவாய்ந்த பூங்கா ரூ.4 கோடியில் புனரமைக்கப்படுவதையும், ரூ.2 கோடியில் புராதன சின்னங்கள் அமைக்கும் பணியையும் பாா்வையிட்டாா். இங்கு, திருச்சியை ஆட்சி செய்த சோழா்கள், பல்லவா்கள், விஜய நகரப் பேரரசா்கள், மராத்தியா்கள், மதுரை நாயக்கா்கள், ஆங்கிலேயா்களின் மாடங்களும், உருவச் சிலைகளும் அமைக்கப்பட உள்ளன. இதேபோல, மேலரண்சாலையில் ரூ.19.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டு பன் அடுக்குமாடி வாகன நிறுத்திடம் கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்ட அவா், பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுவுறுத்தினாா்.

ஆய்வின்போது, திருச்சி மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன், செயற்பொறியாளா்கள் பி. சிவபாதம், ஜி. குமரேசன், உதவி ஆணையா் எஸ். வைத்தியநாதன் உள்ளிட்ட அலுவா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com