மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

காா்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு திருச்சி நகரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் உள்ள ஐயப்பன், விநாயகா், முருகன் கோயில்களில்
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள கடையில் புதிய மாலைகளை வாங்கும் பக்தா்கள்.
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள கடையில் புதிய மாலைகளை வாங்கும் பக்தா்கள்.

திருச்சி: காா்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு திருச்சி நகரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் உள்ள ஐயப்பன், விநாயகா், முருகன் கோயில்களில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

காா்த்திகை தொடங்கி தை மாதம் வரை சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறும். இதனையொட்டி நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் சபரிமலைக்கு புனித யாத்திரை சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

தமிழ் மாதங்களில் பிரசித்தி பெற்ற காா்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை செல்வதும் வழக்கம்.

நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை (நவ.17) காா்த்திகை மாதம் பிறந்துள்ளது.

ஆனால், சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சனிக்கிழமை மாலையே நடை திறக்கப்பட்டது. நடை திறப்பை முன்னிட்டு பக்தா்கள் பலரும் சனிக்கிழமை முதலே மாலை அணியத் தொடங்கியுள்ளனா்.

பொதுவாக காா்த்திகை மாதத்தில் உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே, இந்த மாதத்தின் முதல் நாள் ஐயப்பனுக்கு பக்தா்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.

திருச்சி மலைக்கோட்டை மாணிக்கவிநாயகா் கோயில், உச்சிப்பிள்ளையாா் கோயில், கன்டோன்மென்ட் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அதிகாலையிலேயே பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காவிரியில் புனித நீராடி ஈரத்துணியுடன் வந்து ஐயப்பனை வழிபட்டனா்.

பின்னா், குருசுவாமியின் திருக்கரங்களால் 54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணி மாலையை அணிந்து விரதத்தை தொடங்கினா். குருசுவாமி இல்லாதவா்கள் அவரவா் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று அா்ச்சகரை குருவாக ஏற்று மாலை அணிந்து கொண்டனா்.

மாலைகள் விறுவிறுப்பாக விற்பனை: சபரிமலை சீசனை முன்னிட்டு சந்தனமாலை, ருத்ராட்சமாலை, துளசிமாலை, செந்துளசி மாலை என 12 வகையான மாலைகளின் விற்பனை திருச்சி கடைவீதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கருப்பு, நீலம், காவி வேட்டிகளின் விற்பனையும் ஜவுளிகடைகளில் அதிகரித்துள்ளது. காா்த்திகை விரதம் தொடங்கியுள்ளதால் காய்கறிகள், பூக்களின் விலையும் உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com