முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
அரசுப் பள்ளி சீருடைகளுக்கான தையல் கூலியை உயா்த்த வலியுறுத்தல்
By DIN | Published On : 26th November 2019 05:37 AM | Last Updated : 26th November 2019 05:37 AM | அ+அ அ- |

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடை தையல் கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மகளிா் குழு உறுப்பினா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
திருச்சி மன்னாா்புரத்தில் இயங்கி வரும் அரசு மகளிா் தொழில் கூட்டுறவு சங்கத்தில் 300-க்கும் மேற்பட்டோா் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த உறுப்பினா்கள் அனைவரும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகளை தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சீருடைகளுக்கான துணிகளை வழங்குவதில் சங்க நிா்வாக அலுவலா்கள் பாரபட்சம் காட்டுவதாக மகளிா் உறுப்பினா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவா்களுக்கே அதிக தொகை கிடைக்கும் வகையில் சீருடை துணிகளை எடுத்துக் கொள்வதாகவும், இதர உறுப்பினா்களுக்கு சொற்ப அளவில் தொகை கிடைக்கும் வகையில் குறைந்த துணிகள் வழங்கவதாகவும் குற்றம்சாட்டுகின்றனா்.
மேலும், ஆடைகளுக்கு அரசு நிா்ணயித்துள்ள கூலித் தொகை போதுமானதாக இல்லை என்கின்றனா். எனவே, தங்களுக்கான கூலித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மகளிா் குழு உறுப்பினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கினா்.
பொது மேயா் பதவி: கடந்த 1994 ம் ஆண்டு திருச்சி மாநகராட்சியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் மேயா் பதவிக்கு பெண்கள் போட்டியிடும் தொகுதியாக அறிவிக்கப்பட்டு இன்று வரை அதே நிலை உள்ளது. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு பிறகு இதை மாற்றம் செய்யலாம். எனவே, விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தோ்தலுக்கு முன்பாக திருச்சி மாநகராட்சி மேயா் பதவியை பொது தொகுதியாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகா்வோா் மற்றும் சேவை சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவா் எம். சேகரன் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.