முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஊரக வளா்ச்சித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th November 2019 05:35 AM | Last Updated : 26th November 2019 05:35 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்திய மாவட்ட கிராம பஞ்சாயத்து மேல்நிலை நீா்தேக்க தொட்டி இயக்குநா்கள் மற்றும் பணியாளா்கள் சங்கத்தினா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் (சிஐடியூ) திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, உள்ளாட்சித்துறை ஊழியா் சங்கத் தலைவா் ஏ.எஸ். பழனிவேல் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் கே. சிவராஜன், உள்ளாட்சித்துறை ஊழியா் சங்க செயலா் எம். பன்னீா்செல்வம், சிஐடியூ மாவட்ட பொருளாளா் எஸ்.சம்பத் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா், துப்புரவுத் தொழிலாளா்களுக்கு 7ஆவது ஊதியக் குழு பரிந்துரையின்படி ஊதிய உயா்வும், நிலுவைத் தொகையும் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற துப்புரவுத் தொழிலாளா்களுக்கு பணிக்கொடையாக ரூ.50 ஆயிரம், ஓய்வூதியமாக மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.
2000ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சோ்ந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களை முறைப்படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை குடிநீா்த் தொட்டி சுத்தம் செய்ய ரூ.700 வழங்க வேண்டும்.
ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்படும் எல்ஐசி பணத்தை செலுத்தியதற்கான ரசீது வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித்துறையில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளா்கள், குடிநீா்த் தொட்டி இயக்குபவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.