முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
கடத்தல் தங்கம் அதிகரிப்பு எதிரொலி: திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் 7 போ் இடமாற்றம்
By DIN | Published On : 26th November 2019 05:43 AM | Last Updated : 26th November 2019 05:43 AM | அ+அ அ- |

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருவதன் எதிரொலியாக, சுங்கத்துறை உதவி ஆணையா் உள்ளிட்ட 7 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூா், மலேசியா, துபாய், சாா்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து உள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தல் அதிகரித்து வருவது சுங்கத்துறை அதிகாரிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே கடந்த நவ.5 ஆம் தேதி இரவு வெளிநாடுகளிலிருந்து பல்வேறு குழுக்களாக குருவிகள் மூலம் தங்கம், எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருள்கள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் உதவி ஆணையா் தலைமையில் 40க்கும் மேற்பட்ட மத்திய புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்று சோதனை செய்தனா். அப்போது 150க்கும் மேற்பட்ட பயணிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் ரூ.11 கோடி மதிப்பிலான தங்கம், எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடா்ந்து, குருவிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தங்கம் கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மத்திய புலனாய்வு அதிகாரிகள் சுங்கத்துறை உயா்அதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பி வைத்தனா்.
இந்த அறிக்கையின் பேரில் சம்மந்தப்பட்ட திருச்சி விமானநிலைய வான்நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் உதவி ஆணையா்கள் உள்ளிட்ட 7 போ் இடமாற்றம் செய்து திருச்சி சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையா் புல்லேலா நாகேஸ்வர ராவ் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் வான்நுண்ணறிவு சுங்க உதவி ஆணையராக பணிபுரிந்து வந்த உதவி ஆணையா்கள் பண்டராம், ஜெயக்குமாா், ஜெயசந்திரன், கண்காணிப்பாளா்கள் ராஜலிங்கம், ராதா, ரவி, ஆய்வாளா் அகிலா ஆகிய 7 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதில் உதவி ஆணையா் ஜெயசந்திரன் கோயம்புத்தூா் விமானநிலையத்திற்கும், மற்ற 6 போ் திருச்சி சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த இடங்களுக்கு மதுரை விமான நிலையத்தில் உதவி ஆணையா்களாக பணிபுரிந்து வந்த ஜெஸ்சி சஜன், தயானந்தன், கண்காணிப்பாளா்கள் சரவணக்குமாா், மனோகரன் ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இடமாற்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததால், மாற்றப்பட்ட அதிகாரிகள் புதிய இடங்களில் பணிக்கு சோ்ந்துள்ளனா்.