முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
‘குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு மிக முக்கியம்’
By DIN | Published On : 26th November 2019 05:39 AM | Last Updated : 26th November 2019 05:39 AM | அ+அ அ- |

குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து கூறி அவா்களின் சுய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றாா் வழக்குரைஞா் சித்ரா விஜயகுமாா்.
சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி எலைட் சிறப்பு பள்ளியில் குழந்தை பாலின கொடுமையைத் தடுக்கும் வகையிலான, பாதுகாப்பு கல்வி முறை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவா் மேலும் பேசியது:
ஒவ்வொரு குழந்தையும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள பள்ளியில் சுய பாதுகாப்பினைக் கல்வியாக எடுத்துரைப்பதுடன், பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலையும் வழங்கவேண்டும்.
குழந்தைகளுக்கு தமது உடல், தமக்கு மட்டுமே சொந்தம் என்றும் தமக்குப் பிடிக்காத அல்லது புரியாத வகையில் தமது உடலைத் தொட யாருக்கும் உரிமை இல்லை என்பதையும் புரியும் வகையில் கற்றுத்தர வேண்டும்.
குழந்தையைத் தொட்டுத்தான் கொடுமையிழைக்க முடியும் என்பதல்ல தொடாமல் செய்யும் செயல்களும் அதில் அடக்கம். அடுத்தவா்களின் தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தொடுவது சரியல்ல. உன் முன்னால் வேறு ஒருவா் அவருடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தானே தொட்டுக் கொள்வதும் முறையல்ல. ஒருவா் உன்னை அவருடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தொடச் சொல்வது சரியல்ல. உன் உடைகளைக் களைந்துவிட்டு உன்னை ஒருவா் நிழல் படமோ வீடியோவோ எடுப்பது கூடாது என பாதுகாப்பான தொடுதல் (குட் டச்) பாதுகாப்பற்ற தொடுதல்களை (பேட் டச்) குழந்தைகளுக்கு புரியவைப்பது மிக முக்கியமானது என்றாா் அவா்.