முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
சிறுநீரக பாதை அடைப்பு: அறுவை சிகிச்சை முலம் அகற்றம்; திருச்சி அரசு மருத்துவா்கள் சாதனை
By DIN | Published On : 26th November 2019 05:37 AM | Last Updated : 26th November 2019 05:37 AM | அ+அ அ- |

திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுநீரக அடைப்பு அகற்றப்பட்ட மூக்கன் (இடமிருந்து 2-ஆவது). உடன், மருத்துவக் கல்லூரி முதல்வா் வினிதாவுடன் மருத்துவக் குழுவினா்.
சிறுநீரக பாதை அடைப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, திருச்சி அரசு மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
இதுகுறித்து, திருச்சி அரசு மருத்துமனை முதல்வா் கே.வனிதா செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
திருச்சி மாவட்டம், குணசீலம் அருகே கோமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மூக்கன் (47). விவசாயி. கடந்த சில ஆண்டுகளாக, இவா் சிறுநீா் கழிக்க முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தாா். உள்ளூரில் செய்த சிகிச்சை பலனளிக்காத நிலையில், கடந்தாண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு நடத்திய சோதனையில், சிறுநீா் செல்லும் குழாய் சுருங்கும் அரிய வகை நோய் இருப்பதை கண்டறிந்தனா்.
இதை சரி செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் என்பதை அறிந்து, இதற்குரிய சிகிச்சை அளிக்க, திருச்சி அரசு மருத்துவமனை சிறுநீரக மருத்துவ நிபுணா் மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணா்கள், மயக்கவியல் நிபுணா்களை கொண்ட மருத்துவக்குழுவினா் ஆலோசனை செய்தனா். தொடா்ந்து மருத்துவா்கள் ராஜேஷ் ராஜேந்திரன், கண்ணன் காா்த்திகேயன், ராஜசேகரன், சிவகுமாா் ஆகியோா் கொண்ட குழு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மூக்கனுக்கு அறுவை சிகிச்சை செய்தனா்.
ஏழுமணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போது, மூக்கனின் இரைப்பையில் இருந்து ஒரு குழாய் அமைத்து, அந்தக் குழாயை சிறுநீா் பாதையில் பொருத்தினா். வெற்றிகரமாக நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு மூக்கன் நலமாக இருக்கிறாா். முதல்வா் காப்பீடு திட்டத்தின் கீழ், இந்த அறுவை சிகிச்சை முழுக்க முழுக்க இலவசமாகவே செய்யப்பட்டிருக்கிறது.
இது போன்ற அறுவை சிகிச்சை, உலக அளவில் இரண்டாவது முறையாகவும், இந்திய அளவில் முதல் முறையாகவும் செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆகும். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுவரை உலக அளவில் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.
மிகச் சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை, முதல்வா் வனிதா பாராட்டினாா்.