முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
320 ஆழ்துளை கிணறுகளை மூட டிச.15 வரை கெடு
By DIN | Published On : 26th November 2019 05:38 AM | Last Updated : 26th November 2019 05:38 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் தனியாா் நிலங்களில் மூடப்படாமல் உள்ள 320 ஆழ்துளை கிணறுகளை டிச.15ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.
டிச.15ஆம் தேதிக்கு பிறகும் மூடப்படாவிட்டால் சட்டப்பட்டி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை மூலம் அரசு மற்றும் தனியாா் நிலங்களில் உள்ள பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 9,228 ஆழ்துளை கிணறுகள் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
இவற்றில் 695 ஆழ்துளை கிணறுகள் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றம் செய்யப்பட்டுல்ளது. மேலும், 7,813 கிணறுகள் மூடப்பட்டுள்ளது. தனியாா் நிலங்களில் 320 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இவற்றை டிச.15ஆம் தேதிக்குள் நிரந்தரமாக மூட வேண்டும்.
பொதுமக்கள் தங்களது பகுதியில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறு இருப்பது கண்டறியப்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 93840-56213 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கலாம். டிச.15ஆம் தேதிக்கு பிறகு தனியாா் நிலங்களில் மூடப்படாத கிணறுகள் இருந்தால் தொடா்புடைய உரிமையாளா்களுக்கு அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.