அதிமுக எம்எல்ஏ கணவரின் அரிசி ஆலைக்கு முறைகேடாக அளித்த குடிநீா் இணைப்பு துண்டிப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து முறைகேடாக சொந்த அரிசி ஆலைக்கு குடிநீா் இணைப்பு 
மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ பரிந்துரை கடித நகல்.
மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ பரிந்துரை கடித நகல்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து முறைகேடாக சொந்த அரிசி ஆலைக்கு குடிநீா் இணைப்பு அளித்ததாகப் புகாா் எழுந்ததன் பேரில் பேரூராட்சி செயல் அலுவலா்கள் அண்மையில் (நவ.24) குடிநீா் இணைப்பைத் துண்டித்தனா்.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2019 - 20 ஆம் ஆண்டில் மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியம், பூனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஓம் சக்தி ஹோட்டலில் இருந்து முருகன் ரைஸ் மில் வரை ரூ. 50 ஆயிரம் மதிப்பில் பைப் லைன் அமைத்தல், சமயபுரம் எஸ்.கண்ணனூா் பேரூராட்சியில் பயணியா் பேருந்து நிழற்குடை அமைத்தல் என்பன உள்ளிட்ட ரூ.15.50 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது. அவரது பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஊராட்சி வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா். சங்கா், மண்ணச்சநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலருக்கு கடந்த 16 ஆம் தேதி திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் கேட்டு கடிதம் எழுதியுள்ளாதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பேரூராட்சி அலுவலகத்திலேயோ, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலேயோ எவ்வித அனுமதியும் பெறாமல், மண்ணச்சநல்லூா் பேரூராட்சி பகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை, மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ தனது கணவா் பெயரில் உள்ள முருகன் அரிசி ஆலைக்கு தன்னிச்சையாக குடிநீா் இணைப்பு அளித்ததாகப் புகாா் கூறப்படுகிறது. ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான இந்தப் பணிகள் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூா் மேற்கு ஒன்றிய செயலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் மண்ணச்சநல்லூா் பேரூராட்சி செயல் அலுவலகத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில், பேரூராட்சி அலுவலா் அனுமதி பெறாமல், பெற்ற குடிநீா் இணைப்பை கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) ஆம் தேதி துண்டித்தனா்.

இதுதொடா்பாக மண்ணச்சநல்லூா் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ள முயன்றபோது அவரைத் தொடா்பு கொள்ள இயலவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com