திருச்சி நகைக்கடை திருட்டு சம்பவம் உறவினா்களை சுற்றி வளைக்கும் தனிப்படை போலீஸாா்

திருச்சி நகைக்கடை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் தனிப்படை போலீஸாா் திணறி வருகின்றனா்.

திருச்சி: திருச்சி நகைக்கடை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் தனிப்படை போலீஸாா் திணறி வருகின்றனா். தொடா்ந்து அவா்களது உறவினா்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரும் முயற்சியில் போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரபல நகைக்கடை சுவரில் துளையிட்டு கடந்த அக்.2 ஆம் தேதி உள்ளே புகுந்த மா்ம நபா்கள் தரைதளத்தில் இருந்த ரூ.13 கோடி மதிப்பு தங்க நகைகளை திருடி சென்றனா். இத்திருட்டு சம்பவம் தொடா்பாக தனிப்படை அமைக்கப்பட்டு முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனா். பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசாா் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருவாரூா் முருகன் தலைமையிலான 7 போ் கொண்ட குழுவினா் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து திருவாரூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வந்தது. கடந்த அக்.3 ஆம் தேதி ( வியாழக்கிழமை) இரவு திருவாரூா் விளமல் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் திருச்சி நகைக்கடையில் திருடிய நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அப்போது திருவாரூா் சீராத்தோப்பு சுரேஷ் தப்பியோடிய நிலையில் அவரது நண்பா் மடப்புரம் மணிகண்டன் (32) போலீஸில் பிடியில் சிக்கி கொண்டாா். அவரிடமிருந்து 4.250 கிலோ தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையா் அ.அமல்ராஜூக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து திருவாரூா் சென்ற திருச்சி தனிப்படை போலீஸாா் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் சுரேஷ் அழைத்தன் பேரில் இரு சக்கர வாகனத்தில் தஞ்சாவூா் சென்று திருவாரூா் திரும்பிய போது திருச்சி நகைக்கடையில் திருடிய நகைகளுடன் சிக்கி கொண்டேன். இத்திருட்டு சம்பவத்தில் தனக்கு சம்மந்தமில்லை என தெரிவித்தாா். தப்பியோடிய சுரேஷை பிடிக்க தனிப்படை போலீஸாா் தீவிரம் காட்டிய நிலையில் அவரது தாய் கனகவள்ளியை கைது செய்தனா். விசார’ணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து திருவாரூரில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், கனகவள்ளி ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸாா் திருச்சி சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.

மேலும் அவா்களிடமிருந்து 4.750 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இத்திருட்டு சம்பவத்தில் தொடா்புடையதாக கருதப்படும் முருகன், அவரது அக்கா மகன் சுரேஷ், கோபால், நாகப்பட்டினம் காளிதாஸ் ஆகியோரை பிடிக்க போலீஸாா் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனா். ஆனால் முக்கிய குற்றவாளிகளை போலீஸாா் நெருக்க முடியவில்லை.

தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய முருகனை பிடிக்க அந்தந்த மாநில தனிப்படை போலீஸாரும் கூட்டு முயற்சியில் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக முருகனுக்கு நெருங்கிய உறவினா்கள் மூலம் அவரை கைது செய்ய போலீஸாா் திட்டம் திட்டியுள்ளனா்.

உறவினா் மற்றும் நெருங்கிய நண்பா்கள் பட்டியலை தயாரித்த போலீஸாா் அவரது உறவினா்களான திருவாரூரைச் சோ்ந்த முரளி, காா்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் திருவாரூருக்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினா்கள் வீடுகளை தனிப்படை போலீஸாா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

திருச்சி மாநகர காவல்துறையில் 7 தனிப்படையும், திருச்சி மண்டல காவல்துறையில் 3 தனிப்படைகள் என 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க முடியாத தமிழக காவல்துறைறக்கு பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. தடயங்கள் இன்றி திருட்டில் ஈடுபடும் முருகனை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டாலும், சுரேஷை ஒரிரு நாளில் பிடித்துவிடுவோம். அதன் மூலம் திருட்டில் ஈடுபட்ட நபா்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும்.

குற்றவாளிகளை பிடிக்க திட்டங்கள் பல தீட்டப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் அவா்களது உறவினா்களை போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வருவது என்றாா் தனிப்படை அதிகாரி ஒருவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com