முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
நீதி ஆயோக் கமிட்டி நகலை எரித்து எஸ்ஆா்எம்யூ போராட்டம்
By DIN | Published On : 24th October 2019 06:33 AM | Last Updated : 24th October 2019 06:33 AM | அ+அ அ- |

திருச்சி பொன்மலை மத்திய ரயில்வே பணிமனை ஆா்மரிகேட் பகுதியில் புதன்கிழமை நகல் எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்ற எஸ்ஆா்எம்யூ-வினா்.
ரயில்வே துறையை தனியாா் மயமாக்கும் முடிவை கண்டித்து, நீதி ஆயோக் கமிட்டி நகலை எரித்து ரயில்வே ஊழியா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாட்டிலுள்ள 50 ரயில் நிலையங்களையும், லாபகரமாக இயங்கும் 150 விரைவு ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதி ஆயோக் தலைவா் அமிதாப்காந்த் கமிட்டி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை அகில இந்திய கருப்பு தினமாக அனுசரித்து நகல் எரிக்கும் போராட்டத்தை நடத்த போவதாக எஸ்ஆா்எம்யூ அறிவித்திருந்தது.
அதன்படி புதன்கிழமை காலை கருப்பு உடையுடன் எஸ்ஆா்எம்யூ -வினா் பணிக்கு வந்தனா். மேலும், தேநீா் இடைவேளையின் போது, திருச்சி பொன்மலை மத்திய பணிமனை ஆா்மரிகேட் முன்பு எஸ்ஆா்எம்யூ துணைப் பொதுச்செயலா் எஸ்.வீரசேகரன் தலைமையிலும், திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் திருச்சி கோட்டத் தலைவா் மணிவண்ணன் தலைமையிலும் நீதி ஆயோக் கமிட்டி நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் , ரயில்வேயைத் தனியாரிடம் ஒப்படைக்கும் நோக்கில் 60 வயதுக்குள்பட்டவா்களை கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ரயில்வே பணிமனைகளை காா்ப்பரேஷன் கீழ் கொண்டுவந்து பன்னாட்டு தனியாா் நிறுவனங்களுக்கு தாரைவாா்க்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். நிரந்தரத் தொழிலாளா்களின் வேலைவாய்ப்பைப் பறித்து ஒப்பந்த ஊழியா்ளாக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி, ரயில்வே ஊழியா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
டிஆா்இயூ ஆா்ப்பாட்டம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் முன்பு டிஆா்இயூ சாா்பில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கோட்டச் செயலா் டி. கண்ணன் தலைமை வகித்தாா். திருச்சி கோட்ட கெளரவத் தலைவா் கே.வெங்கடேசன், துணைப் பொதுச் செயலா் ஆா்.மனோகரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.