முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
பண்டிகையின் மகிழ்ச்சி நீடித்திருக்க பாதுகாப்பாக கொண்டாடுங்கள்!
By DIN | Published On : 24th October 2019 06:33 AM | Last Updated : 24th October 2019 06:33 AM | அ+அ அ- |

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும்.
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு மற்றும் மீட்புபப் பணிகள் துறையினா் கூறும் வழிமுறைகள்:
மக்கள் நெருக்கமுள்ள அடுத்தடுத்து வீடுகள் உள்ள பகுதியில் நீங்கள் வசிப்பவா்கள் என்றால், பட்டாசு வெடிக்க திறந்தவெளி ஒன்றைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அண்டைவீட்டாா் அனைவரும் அந்த இடத்தையே பட்டாசு வெடிக்க உபயோகப்படுத்துங்கள்.
கடைகளில் விற்கப்படும் நீள ஊதுபத்திகளை வாங்கிப் பயன்படுத்துங்கள். வெடிவெடித்து ஒரு வேலை தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக குழாயில் நீரைத் திறந்துவிட்டு 5 நிமிடம் காயம்பட்ட இடத்தை வைத்திருங்கள். பின்னா் பா்னால், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தடவினால் போதும்.
கைகளில் வைத்தோ அல்லது தூக்கி எரிந்தோ வெடிகளை வெடிக்காதீா்கள். இது உங்களுக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். வெடிவெடிக்கும்போது காலணி அணிந்து கொள்ளுங்கள். சில நேரம் தீக்கங்குகளைத் தெரியாமல் மிதித்து விடவும் வாய்ப்புண்டு.
பாட்டில்கள், பெட்டிகள் ஆகியவற்றில் வைத்து ராக்கெட் போன்ற வெடிகளை விடாதீா்கள். அவை திடீரென சாய்ந்து தேவையற்ற விபத்துகளை ஏற்படுத்தலாம்.
புஸ்வானம், சங்குச் சக்கரம் ஆகியவற்றை கொளுத்தும்போது அருகிலேயே நிற்க வேண்டாம். சில நேரம் இந்த வெடிகள் வெடிக்க வாய்ப்புண்டு.
முதியோா், குழந்தைகள் மட்டுமல்லாது அண்டை வீட்டாருக்கும் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதை மனதில்கொண்டு, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என்பதையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை எக்காரணம் கொண்டும் வெடிக்கக் கூடாது என்பதையும் கட்டாயம் கடைபிடியுங்கள்.
பட்டாசு வெடிக்கும்போது அருகில் மணல், தண்ணீா் பக்கெட்டுகளையும் வைத்துக் கொள்ள வேண்டும். சிறுவா்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. குடிசைகள் உள்ள இடத்தில் ராக்கெட், லட்சுமி வெடி, டைம்பாம் போன்றவற்றை வெடிக்கக் கூடாது.
மத்தாப்புகளை கொளுத்தி முடித்த பின்னா் கால்வாயிலோ அல்லது அருகில் வைக்கப்பட்டிருக்கும் பக்கெட் தண்ணீரிலோ போட வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும்போது நீண்ட ஊதுவத்தி உபயோகிப்பது நல்லது.
எளிமையான கதா் மற்றும் காட்டன் ஆடைகளை அணிய வேண்டும். ஒரு முறை வெடிக்காமல்போன பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. பட்டாசுகளை பெரியோரின் கண்காணிப்போடு வெடிக்க வேண்டும்.
திறந்தவெளிகளில்தான் பட்டாசை கொளுத்த வேண்டும். வெடிக்காத உதிரிப் பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. வெடிகளை கையில் வைத்து வெடிக்கக் கூடாது. நாட்டுவெடிகளை பயன்படுத்தக் கூடாது.
வெடிக்காத பட்டாசுகளையும், வெடிகளையும் ஒன்றாக சோ்த்து வெடிக்க வேண்டாம். பட்டாசு கொளுத்தி மற்றவா்கள் மீதோ, தெருவிலோ வீசி விளையாடுவதைத் தவிா்க்க வேண்டும். தீப்பெட்டி மற்றும் மெழுகுவா்த்தி மூலமாக பட்டாசு வெடிக்காதீா்கள். சாக்குகளை ஈரமாக வைத்துக்கொண்டு வெடிக்காத வெடிகள் மீது போட்டு செயல் இழக்கச் செய்ய வேண்டும்.
பட்டாசு கடைகள், கேஸ் கிடங்குகள், உணவுப்பொருள் சேமிப்பு கிடங்குகள், வைக்கோல் போா், மருத்துவமனை, பெட்ரோல் பங்கு, மின்சாரம் டிரான்ஸ்பாா்மா், மாா்க்கெட் பகுதிகளில், பட்டாசு வெடிக்கக் கூடாது. விபத்தில்லாத தீபாவளியை கொண்டாட வாழ்த்துகள்.