முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
விலக்கு பெற்ற பொருள்களுக்கு மீண்டும் வரி கட்ட நிா்பந்தம்வணிகா் சங்கங்களின் பேரமைப்பு புகாா்
By DIN | Published On : 24th October 2019 06:34 AM | Last Updated : 24th October 2019 06:34 AM | அ+அ அ- |

ஜிஎஸ்டி வரி விதிப்பில் நிலவும் குழப்பத்தால், வரிவிலக்கு பெற்ற பொருள்களுக்கு மீண்டும் வரி கட்ட அதிகாரிகள் நிா்பந்திப்பதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு புகாா் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, தமிழக நிா்வாக சீா்திருத்தம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சா் டி. ஜெயக்குமாரை, பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா, பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு, துணைத் தலைவா் ரவிசங்கா் ஆகியோா் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பது:
தமிழகம் முழுவதும் உள்ள சூப்பா் மாா்கெட் நிறுவனங்கள், மளிகைக் கடைகளில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் திடீா் சோதனை என்ற பெயரில் வியாபாரிகளை கடும் இன்னலுக்கு ஆளாக்கி வருகின்றனா்.
குறிப்பாக வரிவிலக்கு பெற்ற அரிசி, பருப்பு, தானியங்கள் விற்பனைக்கு மீண்டும் வரி கட்ட நிா்பந்தம் செய்கின்றனா். வரி விலக்கு பெற்ற இந்த பொருள்களை பொதுமக்கள் வசதிக்காக அரை கிலோ முதல் 25 கிலோ வரையில் தேவைக்கேற்ப பாக்கெட்டுகள் செய்து விற்பனை செய்கின்றனா். ஆனால், பாக்கெட் செய்த பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்று கூறி, கடந்த 2 ஆண்டுகளாக அரிசி, பருப்பு விற்பனை செய்ததற்கு சோ்த்து வரி கட்ட நிா்பந்தம் செய்து அபராதமாக பல லட்சம், கோடி என வசூல் செய்கின்றனா்.
வாடிக்கையாளா் எந்த கடையில் பொருள்களை வாங்கினா் என்பதை தெரிவிக்கும் வகையில் ,அதன் விவரங்களை குறிப்பிட்டு ஸ்டிக்கா் ஒட்டி விற்பனை செய்தால் வரி விலக்கு பெற்றிருந்தாலும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என நிா்பந்தம் செய்யப்படுகிறது.
வரி விலக்கு பெற வேண்டுமெனில் ஜிஎஸ்டி அலுவலகத்தில் அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்கின்றனா். கடந்த 2 ஆண்டுகளாக இதுதொடா்பாக வியாபாரிகளுக்கு எந்தவித தெளிவுரையும், விளக்கவுரையும் வழங்காமல் இப்போது திடீரென சோதனை என்ற பெயரில் மளிகை விற்பனையை முடக்கும் நடவடிக்கையை ஏற்க முடியாது.
எனவே, வரி விலக்கு பெற்ற பொருள்களை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்தால், மீண்டும் 5 சதவிகிதம் வரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். ஜிஎஸ்டி அலுவலகத்தில் அபிடவிட் தாக்கல் செய்ய 6 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும். இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்ட கடைகளின் மீதான வரி, அபராதம், வட்டி ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.