வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
By DIN | Published On : 01st September 2019 03:07 AM | Last Updated : 01st September 2019 03:07 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்க, பல்வேறு பகுதிகளிலிருந்து பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆனால் போதிய பாதுகாப்பு சாதன வசதிகள் இல்லாத காரணத்தால், பாதயாத்திரை செல்வோர் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டுப் பெருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் பேருந்து, ரயில்கள் மூலமாக வந்து பங்கேற்பது வழக்கம்.
இதுபோல, அன்னையின் ஆசி பெற 40 நாள்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாகவும் பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவர். நிகழாண்டு பெருவிழா தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தின் துறையூர், முசிறி, மணப்பாறை, வையம்பட்டி உள்ளிட்ட பகுதிகள், கரூர் மாவட்டத்தின் குளித்தலை சுற்று வட்டாரப் பகுதிகள், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட அருகாமை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாகச் செல்கின்றனர்.
முக்கிய நிகழ்வுகள் நெருங்கும் நிலையில், நாளுக்கு நாள் பாதயாத்திரையாகச் செல்லும் கிறிஸ்தவ பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காவி, பச்சை, நீலம், வெண்மை உள்ளிட்ட வண்ணங்களில் உடைகள் அணிந்து பாதயாத்திரை செல்கின்றனர்.
பக்தர்கள் இளைப்பாற: பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாதயாத்திரையாக வருவோர், மாநகரச் சாலைகளுக்கு வந்து தஞ்சாவூர் நெடுஞ்சாலைக்கு வந்து அங்கிருந்து செல்கின்றனர்.
திருச்சி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கிறிஸ்தவர்கள், தொண்டு அமைப்பினர் நீர் மோர் பந்தல் அமைத்தும், அன்னதானம் வழங்கி பக்தர்கள் இளைப்பாற உதவி வருகின்றனர்.
பாதுகாப்பு சாதனங்கள் இல்லை: பல்வேறு இடங்களிலிருந்து பாதயாத்திரையாக வருவோர், திருச்சியிலிருந்து தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் செல்லும் போதும் சாலையையொட்டி செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது சிலர் மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவது நேரிடுகிறது. எனவே, வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காவல்துறையினர் பகல் இரவு நேரங்களில் ரோந்து பணி மேற்கொள்ளுதல், வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்தல், பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை செய்து தர மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.