ரயில் பயணச்சீட்டுகளை முறைகேடாக பதிவு செய்து விற்ற 10 பேர் கைது
By DIN | Published On : 02nd September 2019 06:22 AM | Last Updated : 02nd September 2019 06:22 AM | அ+அ அ- |

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில், இணையதளம் மூலமாக முறைகேடாக ரயில் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்து விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரயில் பயணச்சீட்டுகளை இணையதளம் மூலம் முன் பதிவு செய்து, அதன் பின்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இணையதளம் வழியாக பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து தருவோர் பயணச்சீட்டை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ரயில்வே துறைக்கு புகார்கள் சென்றன.
இதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை இயக்குநர் அருண்குமார் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் நாடுமுழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் தனியார் கணினி மையங்கள், இணையதள மையங்கள் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர்,
ஆபரேஷன் தண்டர் என்ற பெயரில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் எம்.எஸ். முகைதீன், ஜங்ஷன் ரயில்நிலைய ஆய்வாளர் சுஜித்குமார் ராய், தஞ்சை ஆய்வாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் ஆகஸ்ட் 28,29,30-ஆம் தேதிகளில் சோதனை நடத்தினர்.
திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 34 வழக்குகள் பதியப்பட்டு தஞ்சை இன்பன்ட் சகாயசிங், கும்பகோணம் முகமது காலித், சகாபுதின் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் மேலும் ஒரு வழக்குப் பதிந்து, ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர்களிடமிருந்து ரூ.1.15 லட்சம் ரொக்கம், ரயில் பயணச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G