திருச்சி-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தடுப்புகளால் திகரிக்கும் விபத்துகள்

திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போலீஸாரால் குறுகிய தொலைவுக்குள் வைக்கப்பட்டுள்ள
திருச்சி-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தடுப்புகளால் திகரிக்கும் விபத்துகள்

திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போலீஸாரால் குறுகிய தொலைவுக்குள் வைக்கப்பட்டுள்ள அதிக வேகத்தடுப்புகளால் அதிகரிக்கும் விபத்துகளைத் தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நிகழும் பட்டியலில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் குறைந்தபாடில்லை. 
திருச்சி மாவட்டத்தில்  கடந்த 2017 இல் நடந்த 1,564 விபத்துகளில் 458 பேரும், 2018 இல் நடந்த 1571 விபத்துகளில்  344 பேரும், நிகழாண்டில் ஜூன் 6 வரை 491 விபத்துகளில் 118 பேரும் உயிரிழந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலான விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்திருப்பது வேதனைக்குரியது. 
குறிப்பாக திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களாலும், இணைப்புச் சாலைகள் அதிகளவில் இருப்பதாலும் விபத்துகள் அதிகளவில் நிகழ்கின்றன. 
இந்தச் சாலையில் கொட்டப்பட்டு, விமான நிலையம், செம்பட்டு, குண்டூர், மாத்தூர் ஆகிய பகுதிகள் அதிகளவில் விபத்துகள் நடக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டு சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது. 
பாதுகாப்பு இல்லாத சாலை:  திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் டிவிஎஸ் டோல்கேட் முதல் விமான நிலையம் வரை மட்டுமே சாலையின் நடுவே தடுப்புச் சுவர் உள்ளது. மீதமுள்ள பகுதிகளில் தடுப்புச் சுவரின்றி போதிய மின்விளக்கும் இல்லாததால் அசுர வேகத்தில் வரும் வாகனங்கள் எதிர்த்திசையில் வரும் வாகனங்கள் மீது மோதி அடிக்கடி விபத்து நடக்கிறது. 
போதிய பாரமரிப்பு மேற்கொள்ளாததால் சாலைகளை ஆக்கிரமித்து  வளர்ந்துள்ள முட்செடிகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. 
இந்தச் சாலையில் உள்ள இணைப்பு மற்றும் கிராமச் சாலைகளில் போதிய அறிவிப்பு பலகைகள் இல்லை. மேலும், வளைவுகள், பாலங்கள், சாலையில் உள்ள தடுப்புகள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் பிரதிபலிப்பான்களும் இல்லை. 
அசுர வேகத்தில் வாகனங்கள்: தேசிய நெடுஞ்சாலையைப் பொருத்தவரை வாகனங்கள் அசுர வேகத்தில் இயக்கப்படுவதாலும், அதிகாலை நேரத்தில் ஓட்டுர் திடீரென  கண் அயர்வதாலும், வாகனங்கள் திடீர் பழுதாகி நிற்பதாலும் விபத்துகள் நிகழ்வது தொடர்கிறது. சில நேரங்களில் எச்சரிக்கை பலகைகளை அலட்சியப்படுத்தி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அதிவேகமாக ஓட்டுகின்றனர். குறைந்த நேரத்தில் அதிக தூரத்தைக் கடக்க வேண்டும் என்னும் நோக்கில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் உள்ளனர்.  
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மத்திய, மாநில மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள் செயல்படுகின்றன. இங்கு செல்லும் வாகனங்கள் காலை, மாலைகளில் அசுர வேகத்தில் இயக்கப்படுகின்றன. கல்லூரி மாணவர்கள் சிலர் அதிவேக பைக்குகளில் மின்னல் வேகத்தில் செல்கின்றனர். 
அதிகரிக்கும் விபத்துகள்: அதிகரிக்கும் விபத்துகளை தடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் நடத்திய மறியல் போராட்டங்களைத் தொடர்ந்து வேகத்தடுப்புகளை போலீஸார் வைத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையை பொருத்தவரை 3 கிலோ மீட்டருக்கு இடைப்பட்ட பகுதியில் வேகத்தடுப்புகளோ, வளைவுகளோ அமைக்ககூடாது என்பது விதி. ஆனால் இதை மீறி விமான நிலையத்தில் இருந்து மாத்தூர் ரவுண்டானா வரை உள்ள 5 கிலோ மீட்டரில் 5 இடங்களில் வேகத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. 
ஆரம்பத்தில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் இரவு நேரங்களில் இந்தத் தடுப்புகளை அகற்றிவிட்டு, பகல் நேரங்களில் மீண்டும் அதே இடத்தில் வைத்து வந்தனர். ஆனால் தற்போது அவை கேட்டபாரற்று இரவு நேரங்களிலும் இருப்பதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. 
இதுகுறித்து வாகன ஓட்டுநர் டி. பாலகுரு கூறியது:  வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் இரவு நேரங்களில் விபத்துக்கு காரணமாகிவிடுகிறது. இதுபோன்ற தடுப்புகள் இணைப்புச் சாலைகளிலோ, கிராம சாலைகளிலோ வைக்கப்படவில்லை. உள்ளூர் வாகன ஓட்டிகள் தடுப்பு உள்ள இடங்களை தெரிந்து வாகனத்தை மெதுவாக ஓட்டுவார்கள். 
இதர பகுதி மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதனால் அசுர வேகத்தில் வரும் வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுப்பு மீதோ அல்லது வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. 
இதைத் தவிர்க்க தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் தடுப்புகளை இரவு நேரங்களில் அகற்ற வேண்டும். அதேபோல தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள இடம் குறித்து சற்று தொலைவில் எச்சரிக்கை பதாகை வைப்பதோடு, இரவு நேரங்களில் மிளிரும் ஸ்டிக்கர்களை தடுப்புகளில் ஒட்டி வைக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com