திருச்சி சரகத்துக்குள்பட்ட 5 மாவட்டங்களில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணியாதோர் மீது 1.34 லட்சம் வழக்குகள் பதிவு :டிஐஜி தகவல்
By DIN | Published On : 11th September 2019 09:09 AM | Last Updated : 11th September 2019 09:09 AM | அ+அ அ- |

திருச்சி சரகத்துக்குள்பட்ட 5 மாவட்டங்களில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்கிய வகையில் 1.34 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: திருச்சி சரகத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மோட்டார் வாகனச் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி சரகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும், மேற்கொண்ட சிறப்பு வாகனத் தணிக்கையில், தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டியதாக 95, 411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களில் சீட்-பெல்ட் (இருக்கை பாதுகாப்பு) அணியாமல் வாகனம் ஓட்டியதாக 39,152 வழக்குகள் என மொத்தம் 1, 34, 563 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் திருச்சி சரக எல்லைக்குள் நுழையும் வாகனங்கள், அந்தந்த மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடி மற்றும் சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக இனி வரும் காலங்களில், விபத்துகளின் போதும் தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீதும் (காயம் பட்டிருந்தால் கூட) குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும். இதன் மூலம் விபத்து காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மோட்டார் வாகனச் சட்டத்தை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.