சுடச்சுட

  

  தமிழக கோயில்களில்   நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 13th September 2019 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக திருக்கோயில்களில் நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
  இதுதொடர்பாக, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. சம்பத்குமார், திருச்சியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
  தமிழகத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. இவற்றில், 4 ஆயிரம் திருக்கோயில்கள்தான் வருவாய் பெறும் வகையில் உள்ளன. 
  இருப்பினும் அனைத்து திருக்கோயில்களையும் ஒரே அளவில் பராமரிக்க வேண்டியுள்ளது. இந்தச் சூழலில் நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களால் நிர்வாகத்தில் கடும் நெருக்கடி சூழல் நிலவுகிறது. ஒரே நிர்வாக அலுவலர் 40 கோயில்களை நிர்வாகம் செய்யும் நிலை உள்ளது. தனி நபரால் 40 கோயில்களிலும் திருப்பணிகள், நிர்வாகச் செலவு, திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதில் பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது. அதிகாரப்பூர்வமாக 250 நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. அவற்றை நிரப்பினாலும் பணிச்சுமை நீடிக்கவே செய்யும். 
  எனவே, கூடுதலாக ஆயிரம் நிர்வாக அலுவலர் பணியிடங்களை ஏற்படுத்தி திருக்கோயில் நிர்வாகம் செம்மையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  அண்ணா பல்கலைக் கழகம், தொல்லியல்துறை ஆகியவை இணைந்து நிர்வாக அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் ஆகியோருக்கு தற்போது சிலைகள், இதர தொன்மை பொருள்கள் குறித்தும் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தகைய பயிற்சி முன்பு அளிக்கப்படாததாலும், சாதாரண கற்சிலை என கண்டுகொள்ளாமல் இருந்ததாலும் சிலைகள் கடத்தலுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. கற்சிலையும் கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும் மதிப்புடையவை. உலோகச் சிலைகளிலும் அதன் தொன்மை, பாரம்பரியத்துக்கு தகுந்த மதிப்புள்ளது. இவற்றை கண்டறிந்து அனைத்தையும் ஆவணப்படுத்தவும், பதிவு செய்யவும், டிஜிட்டல் மயமாக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதால் சிலைகள் கடத்தல் இனி இருக்காது. இருப்பினும், தொல்லியல் துறையில் பதிவாளர் நிலையில் 20 மாவட்டங்களுக்கு ஒருவர் என்ற நிலை உள்ளதால் பதிவுக்கு தாமதம் ஏற்படுகிறது. கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அனைத்து கோயில்களிலும் சிசிடிவி கேமரா இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 
  கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் இணை ஆணையர் பொறுப்பிலேயே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.
  மேலும், தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு, பொதுக் குழு கூட்டம் வெள்ளி, சனிக்கிழமைகளில் கலையரங்கம் திருமண மண்படத்தில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில், சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai